சீன அதிபர் ஸியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு

சீன அதிபர் ஸியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு

2 mins read
ba9e16eb-0cf3-478a-9d0f-e5192358d788
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (இடது), சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் கைகுலுக்குகிறார். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பெய்ஜிங்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை திங்கட்கிழமை பிற்பகல் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்தார்.

அரசாங்கக் கட்டடத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, குறிப்பிட்ட சில விவகாரங்களில் இருதரப்பும் உடன்பாட்டை எட்டியிருப்பது ‘மிகவும் நல்லது’ என்று திரு பிளிங்கனிடம் அதிபர் ஸி கூறினார்.

“இருதரப்பும் வெளிப்படையான, ஆழ்ந்த உரையாடல்களை நடத்தினர்,” என்று சந்திப்பின் தொடக்கத்தில் அதிபர் ஸி சொன்னார்.

“அரசாங்கங்களுக்கு இடையேயான உரையாடல்கள் பரஸ்பர மரியாதை, நேர்மையின் அடிப்படையிலேயே எப்போதும் இருக்க வேண்டும். உங்களது இந்த வருகையின்மூலம் சீனா-அமெரிக்கா உறவுகளை நிலைப்படுத்துவதில் நேர்மறையான பங்களிப்பை ஏற்படுத்துவீர் என நான் நம்புகிறேன்,” என்று திரு பிளிங்கனிடம் அதிபர் ஸி கூறினார்.

2018க்குப் பிறகு அதிபர் ஸியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஒருவர் சந்தித்து இருப்பது இதுவே முதன்முறை. இவ்வாண்டு பிற்பாதியில் அதிபர் ஸியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்திக்க உச்சநிலைக் கூட்டத்தை ஒருங்கிணைக்க திரு பிளிங்கனின் சீனப் பயணம் உதவக்கூடும்.

சீனாவும் அமெரிக்காவும் செழிப்படைய வாய்ப்புகள் இருப்பதாக சந்திப்பின்போது அதிபர் ஸி பலமுறை வலியுறுத்தினார். மனிதநேயத்தின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் பெய்ஜிங்-வாஷிங்டன் உறவுக்குப் பங்கு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“வரலாறு, குடிமக்கள், உலகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் மனப்பான்மையுடன் இரு நாடுகளும் முறையாகக் கையாள வேண்டும்,” என்று அதிபர் ஸி விவரித்தார்.

முன்னதாக திரு பிளிங்கன், உயர் சீன அரசதந்திரி வாங் யியை திங்கட்கிழமை சந்தித்தார்.

விருந்தினர் மாளிகையில் இருவரும் சேர்ந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்த பின்னர், சந்திப்பைத் தொடங்கினர். அதில் கலந்துகொள்ள செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை.

சீன வெளியுறவு அமைச்சர் சின் காங்குடன் ஞாயிற்றுக்கிழமை திரு பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு வெளிப்படையாக இருந்ததாக இருதரப்பும் குறிப்பிட்டன. அச்சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக ஏழரை மணி நேரம் நீடித்தது.

சீனாவில் திரு பிளிங்கனின் முதல் நாள் சந்திப்புகள், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் திங்கட்கிழமை அவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

பிளிங்கன்-ஸி சந்திப்பு இடம்பெறும் என்பதை இருதரப்பும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அந்தச் சந்திப்பு அனேகமாக இடம்பெறும் என அரசதந்திரிகள் கருதுகின்றனர்.

ஆக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு இருப்பது ஐந்து ஆண்டுகளில் இதுவே முதன்முறை.

கடந்த வாரம் பெய்ஜிங்கில் அமெரிக்க செல்வந்தர் பில் கேட்சை அதிபர் ஸி சந்தித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்