லண்டன்: பிரிட்டனில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டது குறித்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் வேண்டுமென்றே பொய் சொன்னதாக வெளிவந்த அறிக்கையின் தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்துகின்றனர். இந்த விவகாரத்தின் தொடர்பில் நடத்தப்படும் இறுதி நடவடிக்கை இது என்று அரசாங்கம் நம்புகிறது.
அவரது 59ஆவது பிறந்தநாளன்று அந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முன்னாள் தலைவர் எதிர்காலத்தில் மீண்டும் தேர்தல் களத்தில் இறங்குவார் என்று அவருக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னுரைத்துள்ளனர். திரு ரிஷி சுனக்கின் பழைமைவாத அரசாங்கம் அரசியல் பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதிகப் பணவீக்கம், தொடர்ந்து உயர்ந்துவரும் வட்டி விகிதம் ஆகியவற்றால் வாக்களிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடைசியாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், திரு ஜான்சன் பழைமைவாதக் கட்சியை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.
ஆனால் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதால் சென்ற ஜூலை மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
திரு ஜான்சன் நடாளுமன்றக் குழு வெளியிட்ட 106 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நிராகரித்துள்ளார். அரசியல் எதிரிகள் வேண்டுமென்றே ஏற்படுத்திய சூழலில் தாம் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார்.
மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தை அவமதித்ததாகவும் நாடாளுமன்றச் செயல்முறைகளைக் கீழறுத்ததாகவும் திரு ஜான்சன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.
திரு ஜான்சன் ஜூன் 9ஆம் தேதி முன்கூட்டியே அறிக்கையின் பிரதியைப் பெற்ற பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி விலகாமல் இருந்திருந்தால், அவர் 90 நாள் தற்காலிகப் பணிநீக்கத்தையும் அவரது தொகுதியில் மீண்டும் தேர்தலுக்குப் போட்டியிடவேண்டிய நிலையையும் எதிர்நோக்கி இருந்திருப்பார்.
இந்நிலையில், அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


