கிரீஸ் கரையோரப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் டசன் கணக்கான குடியேறிகள் மூழ்கியதைத் தொடர்ந்து, ஆட்கடத்தல்காரர்கள் 10 பேரை பாகிஸ்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை உடனடியாக ஒடுக்க உத்தரவிட்டுள்ள பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றார்.
படகு மூழ்கியதில் ஏறக்குறைய 300 பேர் உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஒன்பது பேரும் பாகிஸ்தானின் குஜராத் நகரில் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“ஒட்டுமொத்த ஆட்கடத்தல் நடவடிக்கையையும் ஒருங்கிணைப்பதில் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டிற்காக தற்போது அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்,” என்று உள்ளூர் அதிகாரி சௌத்ரி சௌகத் தெரிவித்தார்.
அந்தப் படகில் 400 பேர் முதல் 750 பேர் வரை இருந்ததாக நம்பப்படுகிறது என்று குடியேற்றத்துக்கான அனைத்துலக அமைப்பும் ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிர்பிழைத்ததாக பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை தெரிவித்தது. ஆனால், படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பது பற்றிய தகவல் இல்லை.
இந்நிலையில், படகு விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 200ஐ தாண்டக்கூடும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.