வாஷிங்டன்: முதன்முறையாக ‘ஹை சீஸ் ட்ரீட்டி’ எனப்படும் எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பெருங்கடல் பகுதியைப் பாதுகாப்பதற்கான உடன்பாடு அண்மையில் கையெழுத்தானது.
முதன்முறையாக அனைத்துலக அளவில் கையெழுத்தாகியிருக்கும் இத்தகைய உடன்பாடு, இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகளைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த நிலவரத்தை மாற்றக்கூடியது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிகாரபூர்வமாக இந்த உடன்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கான நிகழ்வில் டாக்டர் விவியன் இவ்வாறு சொன்னார்.
எனினும், இதன் தொடர்பில் அனைத்துலக நாடுகள் இன்னும் பங்காற்றவேண்டும்; எல்லா நாடுகளையும் உடன்பாட்டில் ஈடுபடுத்தி அதைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அனைத்துலகச் சமூகம் மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமர்வில் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
உடன்பாட்டைச் செயல்படுத்த குறைந்தது 60 நாடுகள் அதை அங்கீகரிக்கவேண்டும்.
எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் வராத பெருங்கடல் பகுதிகளில் இருக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பது, நீடித்து நிலைக்க வைத்து அவற்றைப் பயன்படுத்துவது ஆகிய அம்சங்களில் ‘ஹை சீஸ்’ உடன்பாடு கவனம் செலுத்துகிறது.