மிசிசிப்பி: அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியைச் சூறாவளி ஞாயிற்றுக்கிழமை தாக்கியது.
“இந்தச் சூறாவளித் தாக்குதலில் 19 பேர் காயமடைந்தனர்; 30 கட்டடங்கள்வரை சேதமடைந்தன. ஒருவர் பலியாகியிருக்கக்கூடும்,” என்று மிசிசிப்பி வட்டாரத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சூறாவளி ஜாக்சன் வட்டாரத்தின் கிழக்குத் திசையில் இருந்து மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் லோய்ன் நகரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்குத் தாக்கியது” என்று அவ்வட்டாரத்தின் வானிலை ஆய்வாளர் எரிக் கார்பென்டர் கூறினார்.
மேலும், அப்பகுதியை அன்றிரவு பல சூறாவளிகள் தாக்கியிருக்கக்கூடும் என்றும் ஆய்விற்குப் பின்னரே சேத விவரமும் மதிப்பீடும் தெரியவரும் என்றும் அவர் சொன்னார்.
இது குறித்து மிசிசிப்பி ஆளுநர் கூறுகையில், “அவசரகாலக் குழுவினர் ஆளில்லா வானூர்திகளின் உதவியோடு மின்சார சேவை பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உதவுகின்றனர். மோஸ் பாயிண்ட் நகரத்தை மேலும் ஒரு சூறாவளி தாக்கக்கூடும். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


