வாஷிங்டன்: சீன அதிபர் ஸி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
சீனாவின் பலூன் ஒன்று அண்மையில் அமெரிக்காமீது பறந்துகொண்டிருந்தது.
அந்நிகழ்வை எண்ணி திரு ஸி மிகவும் வெட்கப்பட்டதாகத் திரு பைடன் சொன்னார்.
வேவு பார்க்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்த அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியபோது திரு ஸி மிகவும் வெட்கப்பட்டார்; அதற்குக் காரணம் அந்த பலூன் அமெரிக்காமீது பறந்துகொண்டிருந்தது அவருக்குத் தெரியாததே என்று திரு பைடன் கூறினார்.
“என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பது சர்வாதிகாரிகளுக்குப் பெரும் அவமானத்தைப் பெற்றுத் தரும். தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த பலூன் அவ்வழியே தள்ளப்பட்டது,” என்றும் திரு பைடன் சொன்னார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அவர் திரு ஸியைச் சந்தித்தார். இருநாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அப்பயணம் இடம்பெற்றது.
அதற்கு மறுநாளான செவ்வாய்க்கிழமையன்று திரு பைடன் இவ்வாறு பேசியுள்ளார்.