அமெரிக்கக் கடலோரக் காவற்படை கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமையன்று தைவான் நீரிணையைக் கடந்துசென்றதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அவரது பெய்ஜிங் பயணத்தை முடித்துக்கொண்ட மறுநாள், அந்தக் கப்பல் தைவான் நீரிணையைக் கடந்துசென்றது.
சீன அரசுரிமையை ஏற்றுக்கொள்ள தைப்பேயை வற்புறுத்துவதற்காக, பெய்ஜிங் அதன் அரசியல், ராணுவ நெருக்குதலை அதிகரித்துவருவதால், சீனாவயும் தைவானையும் பிரிக்கும் அந்த நீரிணை அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது.
‘ஸ்டெரட்டன்’ எனப்படும் அந்தக் கப்பல் தைவான் நீரிணையைக் கடந்துசென்றது, தடையற்ற, வெளிப்படையான இந்தோ-பசிபிக்கிற்கான அமெரிக்காவின் கடப்பாட்டை வெளிக்காட்டுவதாகக் கடற்படை தெரிவித்தது. அனைத்துலகச் சட்டம் அனுமதி அளிக்கும் எந்தப் பகுதியிலும் அமெரிக்க ராணுவம் பறக்கும், மிதக்கும், செயல்படும் என்றும் அது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
சம்பவம் குறித்து சீனாவும் தைவானும் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.


