தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிதிநிலையைச் சீர்ப்படுத்த உலகத் தலைவர்கள் சந்திப்பு

2 mins read
5285a2fe-d2b2-4ccb-a14a-97daa2a798e4
முக்கியமான பொருளியல், பருவநிலை சந்திப்புகளுக்கு முன்னதாக யோசனைகளை முன்வைக்கும் தளமாக இந்த இருநாள் உச்சநிலை மாநாடு அமையும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. - படம்: இபிஏ

பாரிஸ்: அனைத்துலகப் பொருளியல் சீர்திருத்தங்களுக்கான புதிய உடன்பாட்டைத் தயாரிக்க உலகத் தலைவர்கள் வியாழக்கிழமை பாரிஸ் நகரில் கூடினர்.

கடன் சுமையுள்ள வளரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாகப் பருவநிலை மாற்றத்தால். இந்நிலையில், புதிய உடன்பாட்டின் பொருளியல் சீர்திருத்தங்கள் இந்நாடுகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வறுமையை ஒழிப்பது, பூமியைச் சூடேற்றும் கரியமிலவாயு வெளியாக்கத்தைக் கட்டுப்படுத்துவது, இயற்கையைப் பாதுகாப்பது ஆகிய மூன்று அனைத்துலக இலக்குகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவற்றுக்கான நிதித் தீர்வுகளைக் கண்டறிவதே புதிய உலக நிதி உடன்பாட்டுக்கான உச்சநிலை மாநாட்டின் நோக்கம் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் கூறினார்.

பார்படோஸ் பிரதமர் மியா மொட்லியுடன் சேர்ந்து பிரெஞ்சு அதிபர் இந்தச் சந்திப்பை நடத்துகிறார்.

“பூமிக்காகவும் வறுமைக்கு எதிராகவும் நாம் பெரும் மாற்றத்தை உண்டாக்க முடியும்,” என்று திரு மெக்ரான் புதன்கிழமை டுவிட்டரில் பதிவிட்டார்.

கொவிட்-19 கிருமிப்பரவல், உக்ரேன் மீதான ர‌‌ஷ்யாவின் படையெடுப்பு, உயர்ந்துவரும் பணவீக்கம், கடன், பருவநிலை பேரிடர்களால் அதிகரித்துவரும் செலவு போன்ற பற்பல நிகழ்வுகளால் உலக நாடுகளின் பொருளியல் பாதிப்படைந்துள்ளது.

உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களில் கென்ய அதிபர் வில்லியம் ருடோ, ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ‌ஷொல்ஸ், சீனப் பிரதமர் லீ சியாங், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் உள்ளடங்குவர்.

“பருவநிலை மாற்றத்தைச் செயலாற்றலுடன் தடுக்க இயலாத, ஆப்ரிக்காவுக்கு முதலீட்டு நன்மைகளை ஏற்படுத்தித்தரத் தவறிய சிறுசிறு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அவசர முயற்சி எடுக்க வேண்டியதன் அவசியத்தை அதிபர் ருடோ முன்வைப்பார்,” என்று டாக்டர் ருடோவின் அலுவலகம் மாநாட்டுக்கு முன்னதாகத் தெரிவித்தது.

ஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெல்லன், அனைத்துலகப் பண நிதிய இயக்குநர் கிறிஸ்டலீனா ஜார்ஜிவா, உலக வங்கித் தலைவர் அஜெய் பங்கா ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

எதிர்வரும் மாதங்களில் நடைபெறவிருக்கும் முக்கியமான பொருளியல், பருவநிலை சந்திப்புகளுக்கு முன்னதாக யோசனைகளை முன்வைக்கும் தளமாக இந்த இருநாள் உச்சநிலை மாநாடு அமையும் என்று பிரான்ஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்