பாரிஸ்: பருவநிலை மாற்றத்தையும் மற்ற சவால்களையும் சமாளிப்பதற்கு உதவியாக உலக நிதிநிலையைச் சீர்ப்படுத்த முயற்சி எடுக்கும் உச்சநிலை மாநாடு, கடல்மட்ட உயர்வினால் மூழ்கிக் கொண்டிருக்கும் சிறு தீவு நாடுகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அவற்றின் பிரதிநிதி கூறியிருக்கிறார்.
பிரான்ஸ் நடத்தும் இந்த இரண்டு நாள் உச்சநிலை மாநாடு வியாழக்கிழமை பாரிஸ் நகரில் தொடங்கியது.
“இது மிகவும் நல்லதொரு செய்தி. ஏனெனில், நாங்கள் செய்ய முயற்சிப்பதுடன் இது நன்கு பொருந்துகிறது,” என்று சிறு தீவு நாடுகள் கூட்டமைப்பின் தலைவரான சாமோவாவின் ஃபட்டுமானாவா பா’ஒலெலெய் லுட்டரு ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இருபத்திரண்டாம் நூற்றாண்டில் கடல்மட்டம் மேலும் உயரப்போகிறது. உலக வெப்பமயமாதலால் சூறாவளிகளின் சீற்றமும் கடுமையாகியுள்ளது. இதனால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தாழ்வான நிலப்பகுதிகளைக் கொண்ட 39 கடலோரத் தீவு நாடுகளின் நிலைமை, பருவநிலை பாதிப்பை ஆராயும் சந்திப்புகளிலும் ஐக்கிய நாட்டுப் பேச்சுவார்த்தைகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தக் கூட்டமைப்புக்கு அரசியல் செல்வாக்கு இல்லாவிட்டாலும், உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்புக்குள் நிலைநாட்டக் குறிவைக்கும் 2015 பாரிஸ் உடன்பாட்டை உலகம் ஏற்கச் செய்திருக்கிறது.