தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவானுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டாம்: சீனாவுக்கு எச்சரிக்கை

2 mins read
e14d7076-c992-4752-859a-a5638e848010
எல்லைப் பகுதிகள் தொடர்பான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு ராணுவ வலிமையைப் பயன்படுத்தவேண்டாம் என்று ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

பெர்லின்: எல்லைப் பகுதிகள் தொடர்பான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு ராணுவ வலிமையைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் குறிப்பாகத் தைவானுக்கு எதிராக அதைச் செய்யவேண்டாம் என்றும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஜெர்மானிய பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனப் பிரதமர் லி சியாங் வழிநடத்திய பேராளர் குழுவை இந்த வாரம் அவர் வரவேற்றார். கிருமிப் பரவலுக்குப் பிறகு நடைபெற்ற முதல் நேரடிச் சந்திப்பு அது. மேற்கத்திய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே புவிசார் அரசியல் சார்ந்த நெருக்கடிநிலை அதிகரித்துவரும் வேளையில், அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

வற்புறுத்தியோ வலுக்கட்டாயமாகவோ கிழக்கிலும் தென்சீனக் கடல்பகுதிகளிலும் உள்ள தற்போதைய நிலைமையை மாற்றுவதற்கான அனைத்து ஒருதலையான முயற்சிகளையும் நிராகரிப்பதாகத் திரு ஷோல்ஸ் கூறினார். இது, குறிப்பாகத் தைவானுக்குப் பொருந்தும் என்றும் அவர் சொன்னார்.

அத்துடன், சீனாவில் உள்ள சட்ட விதிகள் குறித்தும் மனித உரிமை நிலவரம் குறித்தும் ஜெர்மனி அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தைவானைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு ராணுவத்தின் பயன்பாட்டை இதுவரை கைவிடாத சீனா, தைவானுக்கு அருகில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கக் கடலோரக் காவற்படை கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமையன்று தைவான் நீரிணையைக் கடந்துசென்றதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்­கன் தமது பெய்ஜிங் பயணத்தை முடித்துக்கொண்ட மறுநாள், அந்தக் கப்பல் தைவான் நீரிணையைக் கடந்துசென்றது.

சீன அரசுரிமையை ஏற்றுக்கொள்ள தைவானை வற்புறுத்துவதற்காக, பெய்ஜிங் தனது அரசியல், ராணுவ நெருக்குதலை அதிகரித்துவருவதால், சீனாவையும் தைவானையும் பிரிக்கும் அந்த நீரிணையில் அடிக்கடி பிரச்சினை தலைதூக்குகிறது.

‘ஸ்டெரட்டன்’ எனப்படும் அந்தக் கப்பல் தைவான் நீரிணையைக் கடந்துசென்றது, தடையற்ற, வெளிப்படையான இந்தோ-பசிபிக்கிற்கான அமெரிக்காவின் கடப்பாட்டை வெளிக்காட்டுவதாகக் கடற்படை தெரிவித்தது. அனைத்துலகச் சட்டம் அனுமதி அளிக்கும் எந்தப் பகுதியிலும் அமெரிக்க ராணுவம் பறக்கும், மிதக்கும், செயல்படும் என்றும் அது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

சம்பவம் குறித்து சீனாவும் தைவானும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்