மலேசியாவிற்குள் 11 வனப் பறவைகளைக் கடத்த முயன்றதற்காக 47 வயது சிங்கப்பூரர் ஒருவருக்கு ஜூன் மாதத் தொடக்கத்தில் ஏழு நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதோடு, 80,000 ரிங்கிட் (S$23,200) அபராதமும் அவர் செலுத்த வேண்டும். அந்த ஆடவர், மே 31ஆம் தேதி ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டு கடற்பாலம் வழி ஜோகூர்பாரு சென்றார்.
வழியில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக மலாய் மெயில் செய்தித்தாள் குறிப்பிட்டது.
வாகனத்தைச் சோதித்துப் பார்த்தபோது அதில் 11 பறவைகள் இருந்தது தெரியவந்ததாக அந்தத் துறையின் நிர்வாகியான அமினுதீன் ஜமின் தெரிவித்தார்.
பறவைகளுக்கான 10 மரக் கூண்டுகளையும் அதிகாரிகள் வாகனத்தில் கண்டனர். கைப்[Ϟ]பேசிகளும் பறவை இருக்கைகளும் அதில் இருந்தன. அந்த ஆடவர் யார் என்பது பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
அவரிடம் அந்தப் பறவைகளுக்கான செல்லுபடியாகக்கூடிய ஆவணங்கள் எதுவும் இல்லை. ஜோகூர் வனவிலங்கு தேசியப் பூங்கா துறை அந்த ஆடவருக்கு எதிராக புகார் செய்தது.
அந்த ஆடவர்மீது ஜூன் 7ஆம்தேதி ஜோகூர் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

