பல்வேறு சீனக் கிளைமொழிகளில் சரளமாகப் பேசும் மலேசிய மூதாட்டியின் காணொளி, சமூக ஊடகங்களில் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த மொழிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்கூட அவரைப்போல் அவ்வளவு நன்றாகப் பேசுவதில்லை என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிஜாப் அணிந்த கலகலப்பான மூதாட்டி, ஹொக்கியன் மொழியில் உள்ளூர்வாசிகளுடன் உரையாடுவதைக் காட்டும் ஒரு நிமிட டிக்டாக் காணொளி 1.9 மில்லியன் முறை பார்க்கப்பட்டுவிட்டது.
முன்னாள் தொலைக்காட்சி தயாரிப்பாளர் அஸ்ரில் பஹாருதீன் அந்தக் காணொளியைப் பதிவேற்றினார். பன்மொழி பேசும் 91 வயது மூதாட்டி, கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி வட்டாரவாசிகளால் டொக் மா அல்லது மக்சிக் மா என்றழைக்கப்படுகிறார்.
ஏறக்குறைய 96,300 முறை பார்க்கப்பட்ட இன்னொரு காணொளியில், டொக் மாவுக்கு வேறென்ன மொழிகள் பேசத் தெரியும் என்று திரு அஸ்ரில் கேட்கிறார். தமக்கு மாண்டரின், ஹைனானீஸ், ஹக்கா, தியோச்சூ, மக்காவ் ஆகிய மொழிகளும் பேசத் தெரியும் என்று டொக் மா சொல்கிறார். கேன்டனிஸ் மொழியை அவர் ‘மக்காவ்’ என்று குறிப்பிட்டிருக்கலாம்.
தாய்மொழியான மலாய் மொழியிலும் தமிழ், தாய்லாந்து மொழிகளிலும் அவர் சரளமாகப் பேசுவார். ஆங்கிலமும் அவருக்குக் கொஞ்சம் தெரியும். இந்த மொழிகளைத் தம் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும் தாய்லாந்து மொழியைப் பள்ளியில் படித்ததாகவும் காணொளியில் அவர் கூறினார்.
தமிழில் பேசத் தெரிந்திருந்தாலும், அடிக்கடி பேசாததால் பல சொற்கள் மறந்துவிட்டதாகவும் டொக் மா கூறினார்.
காணொளியைப் பார்த்துக் கருத்துரைத்த ‘பிரியாமேனன்952’ என்பவர், டொக் மாவின் உச்சரிப்பு அற்புதமாக இருப்பதாகப் பாராட்டினார்.


