பெய்ஜிங்: சீனாவில் மூன்று நாள் கடல்நாகப் படகுத் திருவிழா நடைபெற்றதன் பலனாக அங்கு சுற்றுப்பயணங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.3 விழுக்காடு உயர்ந்து 106 மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளதாக கலாசார, சுற்றுப்பயணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது, கொவிட்-19க்கு முந்தைய நிலவரத்தில் இருந்ததைவிட 12.8 விழுக்காடு அதிகம்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான சீனாவில், பயனீட்டாளர் தேவைக்கான அளவுகோலாக சுற்றுப்பயண எண்ணிக்கை அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான மூன்று நாள் விடுமுறையின்போது ஒட்டுமொத்த பயணங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 89.1 விழுக்காடு கூடியதாக போக்குவரத்து அமைச்சு சனிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
கடல்நாகப் படகுத் திருவிழாவின்போது இடம்பெற்ற உள்நாட்டுப் பயணங்கள் மூலம் கிடைத்த வருவாய் ஆண்டு அடிப்படையில் 44.5 விழுக்காடு அதிகரித்து 37.31 பில்லியன் யுவானை (S$7.02 பில்லியன்) தொட்டதாக சுற்றுப்பயண அமைச்சு தெரிவித்தது.
விடுமுறையின்போது சீனாவில் நாள் ஒன்றுக்கு 1.32 மில்லியன் சுற்றுப்பயணங்கள் இடம்பெற்றதாக தேசிய குடிநுழைவு நிர்வாகத்தின் தரவு காட்டியது.


