தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும் வெப்பம், வெள்ளம்: அழியும் பண்ணைகள், விலங்குகள்

2 mins read
1d3342f7-c377-4e9d-843b-ab6050b65a2e
கடும் வெப்பம் காரணமாக நன்டோங் நகரில் உள்ள பண்ணை ஒன்றில் ஆயிரக்கணக்கான பன்றிகள் மடிந்தன. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவில் கடுமையான வெள்ளம், வெப்பம் காரணமாக அங்குள்ள பண்ணைகளும் விலங்குகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாத இறுதியில் பெய்த கனமழை காரணமாக பயிரிடப்பட்டிருந்த கோதுமை அழிந்தன. பயன்படுத்தக்கூடிய அளவில் இருக்கும் சிறிதளவு கோதுமைப் பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய சீன அரசாங்கம் அவசரநிலைக் குழுக்களைப் பணியமர்த்தியது.

வெள்ளம், வெப்பம் காரணமாக பயிர்கள் நாசமடைந்திருப்பதால் சீனாவில் விவசாயிகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுயசார்பு நிலையை சீனா எட்ட வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்த நிலை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகைக்குத் தேவையான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய அந்நாட்டு அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. ஆனால் அண்மை ஆண்டுகளாக அமெரிக்காவுடனான விரிசல், கொவிட்-19 நெருக்கடிநிலை, ரஷ்யா-உக்ரேன் போர் ஆகியவை உலகளாவிய உணவு விலைகளை நிலையற்றதாக்கிவிட்டது.

மற்ற சில நாடுகளில் உணவு விலைகள் அதிகம் ஏற்றம் கண்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது சீனாவில் உணவுப்பொருள்களின் விலை அவ்வளவாக அதிகரிக்கவில்லை. இருப்பினும், உலகளாவிய நிலையில் ஏற்படும் பாதிப்புகளால் தனக்கான உணவு விநியோகம் தடைப்பட்டுவிடுமோ என்ற கவலை சீனாவுக்கு உள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் பன்றி இறைச்சி, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை ஏற்றம் கண்டன. இதன் விளைவாக, விலைகளைக் கட்டுப்படுத்த பன்றி இறைச்சியை தனது உத்திபூர்வ இருப்புகளிலிருந்து சீன அரசாங்கம் விலக்கியது. ஆனால் அதையடுத்து, உணவுப் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்போவதாக சீனத் தலைவர்கள் மறுஉறுதி அளித்தனர்.

அண்மை வாரங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சீனாவின் குவாங்சி மாநிலத்தில் வயல்களில் உள்ள மீன்கள் மடிந்தன. அதுமட்டுமல்லாது, நன்டோங் நகரில் உள்ள பண்ணை ஒன்றில் ஆயிரக்கணக்கான பன்றிகள் மடிந்தன.

லாரி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட பன்றிகள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டதால் அவற்றின் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்க தியான்ஜின் நகரின் தீயணைப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்