புதுடெல்லி: உலகின் மூத்த மொழி தமிழ் என அமெரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் தமிழ் கல்விக்கு ஓர் இருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி முதலாக ‘உலகின் மூத்த மொழி தமிழ்’ என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறிவருகிறார். இதுவரை தனது இந்திய நிகழ்ச்சிகளில் மட்டும் இதைக் கூறிவந்த அவர், தற்பொழுது இதை வெளிநாடுகளிலும் கூறத் தொடங்கியுள்ளார்.
இதன் தொடர்பில், சமீபத்தில் தனது அமெரிக்கப் பயண நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழி தமிழ் என்ற பெருமை இந்தியர்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து வாஷிங்டனில் பிரதமர் மோடி தனது உரையில் , “இந்திய அரசின் உதவியுடன் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விக்காக ஓர் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இந்த இருக்கையால் தமிழ் கலாசாரம் மற்றும் உலகின் மூத்த மொழியான தமிழைப் பரப்புவதில் கூடுதல் பலன் கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் எனது சார்பில் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
மொழிகளை பற்றிய விவாதம் உங்கள் முன் எழும்போது, உலக மனித சமுதாயத்தின் முதல் மொழி தமிழ்தான் என்று அனைவரின் முன் நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள். அனைத்தையும் விடப் பழமையான மொழி தமிழ் மட்டுமே. அது எங்கள் மொழி ஆகும்” என மார்தட்டி உற்சாகமாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில் தமிழைப் பற்றிப் பேசிய காட்சிப் பதிவு, அமெரிக்காவில் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட தமிழ் இருக்கைக்கான தேவை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் வாழும் பல லட்சம் தமிழர்கள் பலனடைவார்கள். ஹியூஸ்டன் தமிழர்கள் தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை மூலதனமாக்கி தமிழ் இருக்கை அமைக்க முயற்சித்தனர்.