தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெருமளவிலான ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்க்கும் தாய்லாந்து காவல்துறை

2 mins read
035aae69-3a95-4706-b8f6-402e13908d8f
திரு பிட்டா லிம்ஜாரோன்ராட்டுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று செனட்டர்கள் பலர் சூளுரைத்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: அடுத்த மாதம் நடுப்பகுதி வாக்கில் தாய்லாந்தின் புதிய பிரதமராக திரு பிட்டா லிம்ஜாரோன்ராட் பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டால் நாட்டில் பெருமளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் வன்முறை வெடிக்கக்கூடும் என்றும் தாய்லாந்து காவல்துறை நம்புகிறது.

அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அது தயாராகி வருகிறது. நிலைமையைச் சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தாய்லாந்துக் காவல்துறையும் ராணுவமும் இணைந்து கலந்துரையாடி வருகின்றன.

திரு பிட்டாவுக்கு எற்கெனவே 313 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் பிரதமராக அவருக்கு மற்ற கட்சிகளைச் சேரந்த 63 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது செனட்டர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது.

அது கிடைக்காவிடில் அவர் பிரதமராவது சிரமம். அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்ற திரு பிட்டா தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்தின் 30வது பிரதமரைத் தேர்ந்தெடுக்க அந்நாட்டு நாடாளுமன்றமும் செனட் சபையும் அடுத்த மாதம் 13ஆம் தேதியன்று கூடக்கூடும் என்று இடைக்கால அமைச்சரவையைச் சேர்ந்த துணைப் பிரதமர் விசானு கிரேயா ஙாம் செய்தியாளர்களிடம் கூறினார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த மாதம் 3ஆம் தேதியன்று சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தாய்லாந்தின் புதிய பிரதமராக திரு பிட்டா பதவி ஏற்பார் என அவரது ஆதரவாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தாய்லாந்து மன்னர் தொடர்பான சட்டம் ஒன்றை திரு பிட்டாவின் கட்சி எதிர்ப்பதால் அவருக்கு ஆதரவாகச் செயல்படப்போவதில்லை என்று செனட்டர்கள் பலர் சூளுரைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்