தற்காப்புக் கலைப் பள்ளியின் மாணவர் மரணம்

2 mins read
902ec5a4-277e-4655-8108-b3b03ff269d6
தற்காப்புக் கலைப் பள்ளி உரிமையாளர்களும் பயிற்றுவிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். - படம்: வெய்போ

பெய்ஜிங்: சீனாவில் உள்ள தற்காப்புக் கலைப் பள்ளியில் சேர்ந்த 8 வயது சிறுவன் மறுநாள் மரணம் அடைந்தான்.

அந்தச் சிறுவன் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.

ஷான்டோங் நகரில் உள்ள சொங்ட ஜுயிங் தற்காப்புக் கலை விளையாட்டு மன்றத்தில் அச்சிறுவனை அவனது பெற்றோர் 7,680 யுவான் செலுத்தி (S$1,440) இம்மாதம் 17ஆம் தேதியன்று சேர்த்தனர்.

ஆனால் பள்ளியில் சேர்ந்த மறுநாளே காயமுற்றுக் கிடந்த அந்தச் சிறுவன் செங்யாங் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையை அடைய ஏறத்தாழ 20 நிமிடங்கள் இருந்தபோதே அவனது இதயத் துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில், அந்தத் தற்காப்புக் கலைப் பள்ளியுடன் தொடர்புடைய மூவர் அதே நாளன்று கைது செய்யப்பட்டனர். பள்ளியின் உரிமையாளர்களான கணவன், மனைவியுடன் பயிற்றுவிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிறுவனின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

அந்தச் சிறுவன் எந்நேரமும் மயங்கி விழக்கூடிய நிலையில் இருந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்தது. அவன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனை ஆடவர் ஒருவர் பிடித்துக்கொண்டிருந்தார், ஆனால் அந்த ஆடவர் விலகிச் சென்றதும் அந்தச் சிறுவன் நிலைகுலைந்து விழுந்தான்.

“இதே போன்று நீ செய்துகொண்டிருந்தால் உன்னை ஓராண்டுக்கு இங்கேயே விட்டுச் செல்ல இருப்பதாக உனது அம்மா தெரிவித்துள்ளார்,” என்று அந்த ஆடவர் அச்சிறுவனிடம் கூறியது காணொளியில் கேட்க முடிந்தது.

அப்போது அச்சிறுவன், தம்மைப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் உதைத்ததாகக் கூறியதையும் காணொளியில் கேட்க முடிந்தது.

பள்ளியின் உரிமையாளர் தமது மகனைக் காட்டும் காணொளியைத் தம்மிடம் அனுப்பி வைத்ததாக சிறுவனின் தந்தை சீன ஊடகத்திடம் தெரிவித்தார்.

அப்போது அந்தக் காணொளியில் தமது மகன் வழக்கத்துக்கு மாறாகப் பலவீனமாக இருப்பதைக் கண்ட சிறுவனின் தாயார் அவனைக் கண்காணிக்கும்படி பள்ளியின் உரிமையாளரிடம் கேட்டுக்கொண்டார்,

ஆனால் அதே நாளன்று அச்சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிர் பிழைப்பது சிரமம் என்றும் பள்ளியின் உரிமையாளர் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து சிறுவன் மாண்டுவிட்டதாக அவனது பெற்றோரிடம் பள்ளி உரிமையாளர் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

தமது மகனின் உடலில், குறிப்பாக அவனது கால்களில் காயங்கள் இருந்ததாக அவனது தாயார் கூறினார். சிகிச்சை பெற தமது மகனை தற்காப்புப் பள்ளியின் பயிற்றுவிப்பாளர்கள் உடனடியாக அனுப்பிவைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்