தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க தொழில்நுட்பத்தைக் கொண்ட சீன ‘வேவு’ பலூன்

2 mins read
2a5c9a78-839c-41d7-a705-e48fb246e768
அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூன். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவைச் சேர்ந்த பலூன் ஒன்று பறந்துகொண்டிருந்தது. வேவு பலூன் என்று சந்தேகிக்கப்படும் அது அமெரிக்க தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தியதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளதாக வால் ஸ்திரீட் ஜர்னல் ஊடகம் புதன்கிழமையன்று கூறியது.

பொதுவாக விற்பனையில் இருக்கும் அமெரிக்க சாதனங்களும் பொருள்களும் அந்த பலூனில் இருந்ததாகப் பல அமெரிக்க தற்காப்பு, உளவுத்துறை அமைப்புகளைச் சேர்ந்த கவனிப்பாளர்கள் கூறினர் என்று வால் ஸ்திரீட் ஜர்னல் தெரிவித்தது.

மேலும், தனிச்சிறப்புமிக்க சீனாவின் உணர்கருவிகள் போன்ற கருவிகளும் பலூனில் இருந்திருக்கின்றன. படங்கள், காணொளிகள் உள்ளிட்டவற்றைப் பதிவிட்டு சீனாவிடம் அனுப்புவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக வால் ஸ்திரீட் ஜர்னல் குறிப்பிட்டது.

அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இந்த விவரத்தைப் பெற்றதாக அது சொன்னது.

வானிலையைக் கண்காணிக்க பலூன் அனுப்பப்பட்டதாக சீனா கூறியிருந்தது. ஆனால், அது வேவு பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதை இப்போது வெளியாகியிருக்கும் விவரங்கள் உறுதிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

எனினும், எட்டு நாள்களுக்கு அமெரிக்காவின் சில பகுதிகள்மீது பறந்துசென்ற பலூன் சீனாவுக்கு எந்தத் தகவலையும் அனுப்பியதாகத் தெரியவில்லை என்று வால் ஸ்திரீட் ஜர்னல் சுட்டியது. அலாஸ்கா உள்ளிட்ட பகுதிகளில் பலூன் காணப்பட்டது.

இது குறித்து வெள்ளை மாளிகையும் அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவும் கருத்து தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா, பலூனை சுட்டு வீழ்த்தியது. ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அமெரிக்காவின் ராணுவப் பகுதிகளிலும் பலூன் காணப்பட்டதைத் தொடர்ந்து அது சுட்டு வீழ்த்தப்பட்டது.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசதந்திர ரீதியான நெருக்கடி ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்