வாஷிங்டன்: விடுமுறைக் காலத்தை முன்னிட்டு அமெரிக்காவின் தெற்குப் பகுதி கடும் வெப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும், அண்டை நாடான கனடாவில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் புகைமூட்டமாக இருந்து வருகிறது.
காற்றுத்தூய்மைக்கேட்டால் அமெரிக்காவில் சுமார் 127 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 79 மில்லியன் பேர் கடும் வெப்பத்தை எதிர்கொள்கின்றனர்.
என்பிசி செய்தி நிறுவனத்தின் வானிலைப் பிரிவு இந்த விவரங்களை வெளியிட்டது.
கனடாவில் சுமார் 490 இடங்களில் காட்டுத்தீ எரிவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 255 இடங்களில் தீ மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
காட்டுத்தீயிலிருந்து வெளிவரும் புகைால் அமெரிக்கா ஒரு மாதத்துக்கும் மேலாக அவதிப்பட்டு வருகிறது.
கனடாவில் வரலாறு காணாத வகையில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அதனால் சுமார் 78,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலம் பெரிதும் சேதமடைந்துவிட்டதாக சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
புகைமூட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவின் சிக்காகோ போன்ற நகரங்களில் பலர் முகக்கவசங்கள் அணிகின்றனர்.