டொரோன்டோ: செயற்கை நுண்ணறிவின் தந்தை என்றழைக்கப்படும் டாக்டர் ஜெஃப்ரி ஹிண்டன், சமுதாயம் இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலைமை ஏற்படுவதற்குமுன் தக்க நடவடிக்கை எடுக்குமாறு புதன்கிழமை உலக நாடுகளிடம் வலியுறுத்தினார்.
டாக்டர் ஹிண்டன் பத்தாண்டுகாலப் பணிக்குப் பிறகு இவ்வாண்டு மே மாதம் கூகலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். புதிய சாட்ஜிபிடி தொழில்நுட்பம் உலகை வசீகரிக்கத் தொடங்கிய வேளையில், செயற்கை நுண்ணறிவின் அபாயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்காக அவர் விலகினார்.
பெரிதும் மதிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானியான டாக்டர் ஹிண்டன், கனடாவின் டொரோன்டோ நகரில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றினார்.
அந்த மாநாட்டில் 30,000க்கும் மேற்பட்ட நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
“செயற்கை நுண்ணறிவு நம்மைவிட அறிவாளியாவதற்குள், கட்டுப்பாட்டை நம்மிடமிருந்து அபகரிக்க அது என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதை அதனை உருவாக்கியவர்கள் புரிந்துகொள்ள ஊக்கம் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார் டாக்டர் ஹிண்டன்.
“தற்போது 99 பேரறிவாளிகள் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஒரு பேரறிவாளி மட்டுமே அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய வழிமுறைகளை ஆராய்கிறார். இதில் அதிக சமநிலை தேவை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவின் அபாயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
“இது அறிவியல் புனைவன்று, வெறும் அச்சுறுத்தலும் அன்று என்பதை மக்கள் புரிந்துகொள்வது முக்கியம்,” என்று அவர் வலியுறுத்தினார். “நாம் சிந்திக்க வேண்டிய உண்மையான அபாயம் இது. இதனை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பதை நாம் முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.”
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவால் ஏற்றத்தாழ்வு மேலும் மோசமடையும் என்றும் டாக்டர் ஹிண்டன் கவலை தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவால் கிடைக்கும் பெரும் ஆதாயம் பணக்காரர்களுக்கே நன்மையளிக்கும், ஊழியர்களுக்கு அன்று.
‘சாட்ஜிபிடி’ பாணி மென்பொருள் உருவாக்கும் ‘போலிச் செய்திகளின்’ அபாயத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மத்திய வங்கிகள் பண நோட்டுகளில் நீர்க்குறியிடுவதுபோல் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் உள்ளடக்கத்திலும் ஏதாவது குறியிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“போலியான அனைத்திலும் போலி எனக் குறியிட முயற்சி செய்வது மிகவும் முக்கியம். அது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியப்படுமா என்பது எனக்குத் தெரியாது.” என்றார் டாக்டர் ஹிண்டன்.

