தைப்பே: தைவானில் நடைபெறவுள்ள சுற்றுப்பயண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணத்துறை அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருக்கிறது.
இரு தரப்புக்கும் இடையே உள்ள கடற்பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தைவானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக முறையில் இயங்கும் தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்பட்டால் தைவானை வலுக்கட்டாயமாகத் தன் வசம் கொண்டுவரவும் தயாராய் இருப்பதாக சீனா கூறியிருக்கிறது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தைவான் மீண்டும் அதன் எல்லைகளைத் திறந்துவிட்டது. எனினும், சீனாவிலிருந்து வரும் பயணிகள் தொடர்ந்து தடை செய்யப்படுகின்றனர்.
தைவானைச் சேர்ந்த சுற்றுப்பயணக் குழுக்கள் சீனா செல்லவும் தைவான் அனுமதிப்பதில்லை. எனினும், தைவானைச் சேர்ந்த தனிநபர்கள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.
ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ‘தைப்பே இன்டர்நேஷனல் சம்மர் டிராவல் எக்ஸ்பசிஷன்’ எனப்படும் தைப்பே அனைத்துலக கோடைகால சுற்றுப்பயண நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் சீன சுற்றுப்பயணத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர். எனினும், அதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

