தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வெளியுறவுச் சட்டத்தை நிறைவேற்றியது சீனா

2 mins read
e9967467-c72d-4092-8764-a296ce958193
கடந்த மார்ச் மாதம் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புட்டினை (வலது) சந்தித்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: மேற்கத்திய நாடுகள் தன்மீது தடைகளை விதித்தால் அதற்கு எதிர்நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாக சீனா புதிய வெளியுறவுச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்தச் சட்டம் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எதிர்நடவடிக்கைகளை எடுக்க தேசிய மக்கள் காங்கிரஸ் செயற்குழுவிற்கு சட்டரீதியிலான அதிகாரத்தை வழங்கும்.

கடந்த அக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் இச்சட்டம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்பின் 2022 டிசம்பரின் சட்ட முன்வரைவு சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கட்சியின் துணைத் தலைவர்களும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய சட்டமானது மேற்கத்திய நாடுகள் விதிக்கும் தடைகளுக்கு ஒரு தடுப்பாகச் செயல்படும் என்றும் அதே வேளையில் தேசிய இறையாண்மையையும் பாதுகாப்பையும் காக்கும் என்றும் மூத்த அரசதந்திரியான வாங் யீ உறுதியளித்துள்ளார்.

ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

“அனைத்துலக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இப்புதிய சட்டத்திற்கும் பொருத்தமான மற்ற சட்டங்களுக்கும் எதிராக, சீனாவின் தேசிய நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் எந்த ஒரு தனிமனிதரும் அல்லது நிறுவனமும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர்,” என்று அச்சட்டத்தின் ஒரு பிரிவு கூறுகிறது.

இப்புதிய சட்டம் ஒரு புதிய மைல்கல் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

வெளியுறவு விவகாரம் குறித்த சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கு வரவிருக்கும் பல சட்டங்களில் இது முதலாவது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள வேளையில் சீனா புதிய வெளியுறவுச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் அண்மையில் பெய்ஜிங் சென்றிருந்தார். ஆயினும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என அழைப்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தயக்கம் காட்டுவதில்லை.

உளவு பலூன் விவகாரமே இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில், உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்குச் சீனா தொடர்ந்து ஆதரவளித்து வருவது ‘எரிகிற நெருப்பில் எண்ணய்யை’ ஊற்றியதுபோல் ஆயிற்று.

குறிப்புச் சொற்கள்