ஃபுக்குஷிமா நீரை வெளியேற்ற திட்டம்

1 mins read
c798e314-4bdd-486b-8090-04371e0a6a82
ஃபுக்குஷிமா டாய்ச்சி அணுசக்தி ஆலையில் இருக்கும் நீர்க்கலன்கள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: அழிந்துபோன ஃபுக்குஷிமா டாய்ச்சி அணுசக்தி ஆலையிலிருந்து கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீரை 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்தே வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அணுசக்தி கவனிப்புக் குழு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து ஜப்பான் இந்நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நிக்கெய் செய்தி நிறுவனம் கூறியது.

2011ஆம் ஆண்டு ஜப்பானை மோசமான நிலநடுக்கம் உலுக்கியது. நிலநடுக்கத்தாலும் அதனால் எழுந்த சுனாமி அலைகளாலும் ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலை அழிந்துபோனது.

ஆலையிலிருந்து கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீரை வெளியேற்றும் நடவடிக்கை, உலகளாவிய பாதுகாப்புத் தரநிலைகளுக்கு உகந்ததாக இருக்கும் என்று ஐஏஇஏ எனப்படும் அனைத்துலக அணுசக்தி அமைப்பு செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது. ஈராண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரிய வந்ததாக அமைப்பு குறிப்பிட்டது.

அணுசக்தி ஆலையை இயங்காமல் இருக்கச் செய்யும் நோக்குடன் வசந்தகாலம் அல்லது கோடைக்காலத்திலிருந்து ஃபுக்குஷிமா நீரைப் பெருங்கடலுக்குள் வெளியேற்றத் தொடங்கவிருப்பதாக தோக்கியோ ஜனவரி மாதம் தெரிவித்திருந்தது. எனினும், நடவடிக்கையைத் தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

ஜப்பானின் தேசிய அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்க ஜப்பான் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வார இறுதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நடவடிக்கைக்கு சில அண்டை நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் அவற்றிடையே நிலவுகிறது. குறிப்பாக சீனா அதிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எனினும், கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீரைப் பெரும்பாலும் சுத்தம் செய்துவிட்டதாக ஜப்பான் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்