புக்கெட்டில் சிங்கப்பூர் சுற்றுப்பயணியை மிரட்டியதாக தாய்லாந்து ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு

2 mins read
4aaaa616-a773-426c-8163-f4b1023af179
சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காணொளியில் சுற்றுப்பயணியை ஓட்டுநர் தகாத வார்த்தைகளில் திட்டியதாகத் தெரிகிறது. - படம்: புக்கெட் மாநிலக் காவல்துறை/ஃபேஸ்புக்

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாய்லாந்தின் புக்கெட்டில் சிங்கப்பூர் சுற்றுப்பயணியை மிரட்டியதாக வேன் ஓட்டுநர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

‘ஹட்யாய் வோர்ல்டு டுவர்’ பயண நிறுவனத்தில் பணிபுரியும் போராமெட் சோராகெட் என்ற அந்த ஓட்டுநர், முவாங் புக்கெட் காவல் நிலையத்தில் திங்கட்கிழமையன்று சரணடைந்ததாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் பிராட்டுவாங் போல்மனா கூறினார்.

சமூக ஊடகத்தில் காணொளி ஒன்று பகிர்ந்துகொள்ளப்பட்டதை அடுத்து, 47 வயது போராமெட் விசாரணையில் உதவுவதற்காகக் காவல்துறையினரால் அழைக்கப்பட்டார்.

அந்தக் காணொளியில் 35 வயது சிங்கப்பூரரான ஃபாரிஸ் அப்துல் காடிர் பஷாராஹிலை அவர் தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

அது குறித்து திரு ஃபாரிஸ் ஞாயிற்றுக்கிழமையன்று காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காணொளியில் செந்நிறச் சட்டை அணிந்திருந்த அந்த வேன் ஓட்டுநர் தமது கையை உயர்த்தியபடி அந்தச் சிங்கப்பூரரை நோக்கிச் சென்றதைக் காண முடிந்தது. அந்த ஓட்டுநர் தமது புறங்கையால் சிங்கப்பூரரை அடிக்கப்போவதாக மிரட்டியதையும் காணொளியில் பார்க்க முடிந்தது.

காணொளி முழுதும் அந்த வேன் ஓட்டுநர், தமது முதுகுக்குப் பின்னால் தடி போன்ற ஒரு பொருளை வைத்திருந்தார்.

இருவரும் ‘ஹட்யாய் வோர்ல்டு டுவர்’ என்ற வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்த வேனுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தனர்.

கிராபியில் தமது பயணத்தைத் தொடங்கிய திரு ஃபாரிஸ், கிராண்ட் சுப்பிச்சா சிட்டி ஹோட்டலுக்குச் செல்வதற்கு வேன் ஓட்டுநரிடம் கூடுதலாக 100 பாட் ($3.90) செலுத்த மறுத்ததால் வாக்குவாதம் எழுந்தது.

வேன் ஓட்டுநர் வாகனத்திலிருந்து பயணப்பெட்டியை இறக்கிய விதம் குறித்தும் திரு ஃபாரிஸ் அதிருப்தி தெரிவித்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

இந்நிலையில், வேன் ஓட்டுநர் ரப்பர் குழாயை முதுகுக்குப் பின்னால் பிடித்துக்கொண்டிருந்ததை புக்கெட் காவல்துறையினர் தெளிவுபடுத்தினர்.

ஒருவரை மிரட்டி பயமுறுத்தியதற்காக அவர்மீது வட்டார நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 1,000 பாட் அபராதமும் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்