கோலாலம்பூர்: மலாய் சமூகத்தின் நிலை, அவர்களின் வருங்காலம் ஆகியவற்றைப் பற்றிப் பேச டாக்டர் மகாதீர் முகம்மதுடன் சந்திப்பு நடத்தியதாக பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
இருவரும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தவர்கள்.
மலேசியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு டாக்டர் மகாதீர் ஆதரவு வழங்குவது குறித்து பேசப்பட்டதாகவும் திரு முகைதீன் கூறினார்.
“மலாய் சமூகத்தினரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கான ஆதரவை மேம்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம். குறிப்பாக ஆறு மாநிலத் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு ஒப்புக்கொண்டோம்,” என்று திரு முகைதீன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். செவ்வாய்க்கிழமை இரவு டாக்டர் மகாதீரைச் சந்தித்த பிறகு அவர் இவ்வாறு சொன்னார்.
ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியன்று மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமையன்று அறிவித்தது.
இந்நிலையில், மலாய் இனத்தவரின் வருங்காலத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை ‘மலே புரோக்லமேஷன்’ எனப்படும் மலாய் பிரகடன ஆவணத்தை மட்டும் மையமாகக் கொண்டு இடம்பெறவில்லை என்று திரு முகைதீன் சுட்டினார். மலாய் பிரகடன ஆவணம், மலாய் சமூகத்தின் அக்கறைகளைப் பாதுகாத்து அதை இணைக்கும் நோக்குடன் வரையப்பட்டது.
12 குறிப்புகளைக் கொண்ட அந்த ஆவணத்தை டாக்டர் மகாதீர் வரைந்தார்.
திரு முகைதீனுக்கும் டாக்டர் மகாதீருக்கும் இடையிலான சந்திப்பு, மலாய் இனத்தவரின் ஆற்றலை மேம்படுத்தி அவர்களின் நிலையை வலுப்படுத்தும் வகையில் மலாய் பிரகடன இயக்கத்துக்கு மெருகூட்டும் என்று அதன் செயலகத் தலைவர் கைருதீன் அபு ஹசான் முன்னதாகக் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டு மணிநேரம் நீடித்த சந்திப்பு பெரிதும் பாராட்டப்படவேண்டியது என்றும் திரு கைருதீன் சொன்னார். மலேசியாவில் மலாய் சமூகத்தினரின் ஆற்றலை மேம்படுத்தும் முயற்சியைத் தொடர்வதற்காக ஒரு காலத்தில் தங்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க இருவரும் தயாராய் இருப்பதே அதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டில் ஆளும் கூட்டணியாக இருந்த பக்கத்தான் ஹரப்பானிலிருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினர். அதனால் டாக்டர் மகாதீரின் தலைமையில் சிறிது காலம் பதவியில் இருந்த பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து திரு முகைதீன் பிரதமராகப் பதவியேற்றார்.
‘ஷெரட்டன் மூவ்’ என்றழைக்கப்படும் அந்நிகழ்வுக்குப் பிறகு முதன்முறையாக திரு முகைதீனும் டாக்டர் அன்வாரும் சந்தித்திருப்பதாக மலாய் மெயில் நாளிதழ் தெரிவித்தது.

