சோல்: தென்கொரியாவில் போதுமான குழந்தை மருத்துவர்கள் இல்லாத நிலை தலைதூக்குகிறது.
உலகில் தென்கொரியாவில்தான் பிறப்பு விகிதம் ஆகக் குறைவாக இருக்கிறது. அதனால் குழந்தை மருத்துவர்களை வேலைக்கு எடுக்க அந்நாட்டு மருத்துவமனைகள் சிரமப்படுகின்றன.
இதன் காரணமாக குழந்தைகள், சிறார் உடல்நலம் சார்ந்த அபாயங்கள் எழக்கூடும் என்று அஞ்சப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2022ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில் தென்கொரியத் தலைநகர் சோலில் இருக்கும் குழந்தை மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 12.5 விழுக்காடு குறைந்தது. 456 குழந்தை மருந்தகங்களும் மருத்துவமனைகளும் மட்டுமே சோலில் எஞ்சியுள்ளன.
இதே காலகட்டத்தில் அந்நகரில் உள்ள மனநல மருந்தகங்களின் எண்ணிக்கை 76.8 விழுக்காடு அதிகரித்தன. அனஸ்தீலியாலஜி எனப்படும் அறுவை சிகிச்சை பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் 41.2 விழுக்காடு கூடின.
சோல் கழகம் எனப்படும் அரசாங்க வல்லுநர்க் குழு இந்த விவரங்களை வெளியிட்டது.
2022ஆம் ஆண்டில் தொன்கொரியாவில் பிறப்பு விகிதம் 0.78ஆகப் பதிவானது. அப்படியென்றால் அந்நாட்டில் சராசரியாக ஒரு பெண் ஒரு குழந்தைகூட பெற்றுக்கொள்வதில்லை என்று அர்த்தமாகும்.
அதனால் இத்துறையைப் பல மருத்துவர்கள் புறக்கணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத தம்பதிகள் இப்பிரச்சினையால் மேலும் கவலை கொள்வதாகவும் கூறப்படுகிறது.

