தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேற்கத்திய முதலீடுகள் குறித்து சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

2 mins read
fdc37560-930e-4630-9341-416d13830890
இந்தோனீசியாவில் 2022 நவம்பரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கிடையே சீன அதிபர் சீ ஜின்பிங்கை (இடது) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: மேற்கத்திய முதலீடுகளை அதிகம் சார்ந்திருக்கும் சீனா கவனமாக இருக்கவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் சீ ஜின்பிங்கிடம் தாம் எச்சரித்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சீன அதிபர் சந்தித்ததைத் தொடர்ந்து தாம் அவ்வாறு எச்சரித்ததாக அதிபர் பைடன் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

“இது அச்சுறுத்தல் அன்று, கூர்நோக்கின் அடிப்படையிலான கருத்து மட்டுமே என்று சீன அதிபரிடம் கூறினேன்,” என அந்த நேர்காணலில் திரு பைடன் குறிப்பிட்டுள்ளார்.

“உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, 600 அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறிவிட்டன. சீனப் பொருளியல் ஐரோப்பிய, அமெரிக்க முதலீடுகளைச் சார்ந்திருப்பதாக நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள். எனவே கவனமாக இருங்கள் என்று வலியுறுத்தினேன்,” என்றார் அதிபர் பைடன்.

ரஷ்ய அதிபர் புட்டினும் சீன அதிபர் சீயும் கடந்த மார்ச் மாதம் இரு நாள் சந்திப்பில் நேரடியாகக் கலந்துகொண்டனர். அப்போது நட்பார்ந்த சொற்களைப் பரிமாறிக்கொண்ட இரு தலைவர்களும் மேற்கத்திய நாடுகள் குறித்து கூட்டாக குறைகூறல்களை முன்வைத்தனர். இருப்பினும் உக்ரேன் தொடர்பில் குறிப்பிடத்தக்க அரசதந்திர முன்னேற்றம் ஏதும் அந்தச் சந்திப்பில் ஏற்படவில்லை.

இந்த வாரத் தொடக்கத்தில் சீன, ரஷ்ய அதிபர்கள் காணொளி வாயிலாகச் சந்தித்துப் பேசினர்.

தேசியப் பாதுகாப்பு, தைவான் விவகாரம், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அதிகரிக்கும் அமெரிக்காவின் ஏற்றுமதித் தடை, சீனாவின் தொழில்துறைக் கொள்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அதிபர் பைடனின் கருத்து வெளியாகி இருக்கிறது.

சீன அதிபரின் பதில் குறித்துக் கேட்டபோது, “அவர் கேட்டுக்கொண்டார்; எதிர்த்து விவாதம் செய்யவில்லை. நன்றாக கவனித்தால், ரஷ்யா தொடர்பில் அவர் முழு வீச்சில் செயல்படவில்லை என்பது புரியும்,” என்றார் அதிபர் பைடன்.

குறிப்புச் சொற்கள்