லண்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு பிரிட்டன் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லித்துவேனியாவில் நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்குமுன் லண்டன் செல்லும் அவர், மன்னர் சார்ல்ஸ், பிரதமர் ரிஷி சுனக் இருவரையும் சந்திப்பார். மன்னருடன் பருவ நிலை மாற்றம் தொடர்பான விவகாரங்கள் குறித்து அதிபர் பைடன் கலந்துரையாடுவார் என்று கூறப்பட்டது.
அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான அணுக்கமான உறவை வலுப்படுத்துவது அமெரிக்க அதிபரின் பயணத்தின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அதிபர் பைடன் திங்கட்கிழமை பிரதமர் சுனக்கின் அலுவலகத்தில் அவரைச் சந்திப்பார் என்று தெரிகிறது. இரு தலைவர்களும் நேட்டோ மாநாடு குறித்தும் உக்ரேன் குறித்தும் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு சுனக்கின் பேச்சாளர் கூறினார்.
சந்திப்பிற்குப் பிறகு அதிபர் பைடன், பிரதமர் சுனக் இருவரும் லித்துவேனியா சென்று நேட்டோ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வர்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு அதிபர் பைடன், பிரதமர் சுனக் இருவரும் லித்துவேனியா சென்று நேட்டோ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வர். அங்கே நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமான சந்திப்பு நடத்துவர்.
அதற்குப் பிறகு திரு பைடன் ஃபின்லாந்துத் தலைநகர் ஹெல்சிங்கிக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அவர் ஸ்கேண்டினேவிய வட்டார நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பார் என்று கருதப்படுகிறது.


