பெய்ஜிங்: சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்டோங் மாநிலத்தில் உள்ள பாலர்பள்ளியில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார் என்று மாநில அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
“பலியானவர்களில் ஒருவர் ஆசிரியர், இருவர் பெற்றோர், மூவர் மாணவர்கள். தாக்குதலை நடத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று கூறினார்.
லியான்ஜியாங் நகரில் நிகழ்ந்த இத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் விவரங்கள் பற்றியும் தாக்குதலில் எத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும் அந்தப் பேச்சாளர் தெரிவிக்கவில்லை.
காவல்துறை புலனாய்வு தொடர்கிறது. கைது செய்யப்பட்டவர் 25 வயது வூ என்றும் காவல்துறை கூறியது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7.40 மணிக்குத் தாக்குதல் நிகழ்ந்தது என்று மாநில அரசாங்கத்தின் செய்தித் தளம் கூறியது.
வழிப்போக்கர்கள் அந்தச் சம்பவத்தைக் காணொளியாக எடுத்து அதை டோயின் மற்றும் வெய்போ தளங்களில் பதிவேற்றம் செய்தனர். ஆனால், அவற்றை மாநில அரசாங்க அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.
சீனாவில் துப்பாக்கிகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்நாட்டில் கத்திக் குத்து தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அண்மைய பத்தாண்டுகளில் பொருளியல் வளர்ச்சி அதிகரித்திருக்கும் வேளையில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி வேகமாக விரிவடைந்து வருகிறது. இச்சூழ்நிலையில் கடுமையான வன்முறைச் சம்பவங்களும் கூடிக்கொண்டே போகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அண்மைய ஆண்டுகளாக மாணவர்களையும் பள்ளிகளையும் குறிவைக்கும் ஆபத்தான தாக்குதல்கள் நாடு முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
இத்தகைய வன்மையான செயல்கள் நடைபெறுவதற்கான மூலக்காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அமைப்புகள் பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று பல முனைகளிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆகஸ்டில், சீனாவின் தென்கிழக்கு ஜியாங்ஸி மாநிலத்தில் உள்ள பாலர்பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர், அறுவர் காயமடைந்தனர்.
2021 ஏப்ரலில், சீனாவின் தென்பகுதியில் உள்ள பாலர்பள்ளியில் கத்தியுடன் நுழைந்த ஆடவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பிள்ளைகள் மாண்டனர், 16 பேர் காயமடைந்தனர்.

