தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரச அதிகாரம் குறித்த சர்ச்சை; பிரதமர் நியமனம் இழுபறி

2 mins read
1cb105b4-d0a3-4b6d-868f-07c8f2973562
அண்மையில் நடந்து முடிந்த தாய்லாந்துப் பொதுத் தேர்தலில் திரு பிட்டா லிம்ஜாரோன்ராட் (நடுவில்) தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் அடுத்த பிரதமரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரச அதிகாரம் குறித்து கட்சிகளிடையே நிலவும் மாறுபட்ட கருத்துகளே இதற்குக் காரணம்.

அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் திரு பிட்டா லிம்ஜாரோன்ராட் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்று வெற்றி பெற்றது.

இருப்பினும், பெரும்பாமை கிடைக்காததால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது செனட்டர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே திரு பிட்டா பிரதமராக முடியும்.

தாய்லாந்து அரசரின் அதிகாரத்தைக் குறைக்கத் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர இருப்பதாக திரு பிட்டா சூளுரைத்துள்ளார். இது எதிர்க்கட்சியினரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இதனால் திரு பிட்டாவுக்கு ஆதரவு தர அவர்கள் தயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் தற்போது நடப்பில் இருக்கும் சட்டத்தின்படி அந்நாட்டு அரசை இழிவுபடுத்தும் வகையில் கருத்துரைத்தாலோ அல்லது செயல்பட்டாலோ 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது.

இதற்கு உடன்படும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் திரு பிட்டா பிரதமராகக்கூடாது என்று குரல் எழுப்பியுள்ளனர்.

“திரு பிட்டா தலைமையிலான கூட்டணி பரிந்துரை செய்துள்ள சட்டத் திருத்தம் அரசரை அவமதிக்கும் வகையில் உள்ளது,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் செனட்டர் ஸ்ரீ சுவான்பானோன் தெரிவித்தார்.

அரசருக்கு இருக்கும் அதிகாரத்தைப் பாதுகாப்பதாகக் கூறி கடந்த பல ஆண்டுகளாக தாய்லாந்து ராணுவம் பலமுறை அரசியலில் தலையிட்டுள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட்டபோதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டபோதும் அரச அதிகாரத்தைப் பாதுகாக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்ப்புகளை ராணுவம் முடக்கியது.

இந்நிலையில், நாளை தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பர்.

ஆனால், பிரதமர் பதவிக்காக நிலவும் மிகக் கடுமையான போட்டி அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. தாய்லாந்து ராணுவம் நியமித்துள்ள 250 செனட்டர்கள் திரு பிட்டா தலைமையிலான கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தாய்லாந்து அரசரான 70 வயது மன்னர் வஜிரலொங்கோர்ன் அரசு அதிகாரச் சட்டம் குறித்து மௌனம் காத்து வருகிறார். அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்புச் சொற்கள்