அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு

1 mins read
16d19575-9225-45e3-ad14-be14d2bb043d
பிரயுத் சனோச்சா. - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து பிரதமர் பிரயுத் சனோச்சா, தாம் அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக ராணுவம் நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து பிரதமராகப் பொறுப்பேற்ற திரு சனோச்சா, புதிய ஆட்சி அமைக்கப்படும்வரை தற்காலிகப் பிரதமராகச் செயலாற்றுவார்.

திரு பிரயுத்தின் கட்சியான ஐக்கிய தாய் தேசிய கட்சி, இவ்வாண்டு மே 14ஆம் தேதி நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அவரது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தலில் ஐக்கிய தாய் தேசிய கட்சி, 500 நாடாளுமன்ற இடங்களில் 36 இடங்களை மட்டும் கைப்பற்றியது. ‘முன்னோக்கிச் செல்’ கட்சி ஆக அதிகமாக 151 இடங்களைப் பிடித்துள்ளது.

2019ஆம் ஆண்டு தேர்தல்வரை, ராணுவத் தலைமையிலான அரசாங்கத்தை நடத்தினார் முன்னாள் ராணுவத் தலைவரான திரு பிரயுத்.

நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக நீடிக்கும்படி நாடாளுமன்றம் அவரை நியமித்ததாக அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், அந்த நியமனம் நேர்மையான முறையில் இடம்பெறவில்லை என திரு பிரயுத்தின் எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

குற்றச்சாட்டுகளை மறுத்துவரும் திரு பிரயுத், நாட்டுக்காகப் பல வெற்றிகளைச் சாதித்திருப்பதாகக் கூறினார்.

“பிரதமராக நாட்டையும் சமயத்தையும் மன்னராட்சியையும் அன்பார்ந்த மக்களுக்காகப் பாதுகாக்க கடினமாக உழைத்திருக்கிறேன்,“ என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்