பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் வேட்பாளர் பிட்டா லிம்ஜாரோன்ராட் பங்குதாரர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினராவதிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டுமா என்பது பற்றி முடிவெடுக்க இந்த வழக்கை அரசியலமைப்பு நீதிமன்றத்திடம் தாய்லாந்து தேர்தல் ஆணையம் ஒப்படைக்கும்.
உள்ளூர் ஊடகங்களும் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த ஒரு தரப்பும் புதன்கிழமை இதனைத் தெரிவித்தன. இந்த நிலவரம் பிட்டாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்வரை, தேர்தலில் வென்ற மூவ் ஃபார்வர்ட் கட்சியின் தலைவரான பிட்டாவை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்ய தாம் கோரப்போவதாக தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேச அனுமதி இல்லை என்பதால் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
அடுத்த பிரதமர் யார் என்பதைத் தேர்வுசெய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முதல் நாள் இந்த நிலவரம் உருவெடுத்துள்ளது. தாய்லாந்தில் ஆட்சி அமைக்க முற்படும் கூட்டணியில் எட்டு கட்சிகளின் ஆதரவை பிட்டா பெற்றுள்ளார்.
மே 14ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ராணுவத்துடன் கூட்டு சேர்ந்த கட்சிகளை மூவ் ஃபார்வர்ட் கட்சியும் மற்றோர் எதிர்க்கட்சியும் தோற்கடித்தன.
ஊடக நிறுவனமான ஐடிவியில் பிட்டா பங்கு வைத்திருந்ததால் தேர்தலில் நிற்க அவருக்குத் தகுதியில்லை எனக் கூறப்படும் புகார் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஐடிவி நிறுவனம் பல்லாண்டு காலமாக மக்கள் தொடர்பு ஊடகமாக செயல்படவில்லை என்பதை பிட்டா கூறி வந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இந்த வழக்கை நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதில் தேர்தல் ஆணையம் அவசரம் காட்டுவதை மூவ் ஃபார்வர்ட் கட்சி விமர்சித்துள்ளது. குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க பிட்டாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அக்கட்சி கூறியது.