நகர்ப்புறங்களில் நிலவும் வெப்பம், தரையில் நடைபாதைக்குக் கீழேயும் ஊடுருவிச் செல்கிறது. நகர்களில் நிலவும் வெப்பத்தின் ஒரு பகுதி பூமிக்குக் கீழேயும் செல்கிறது.
‘பாதாள பருவநிலை மாற்றம்’ என்று இதை அறிவியல் அறிஞர்கள் வர்ணிக்கிறார்கள்.
இப்படி பூமிக்குக் கீழே தேங்கும் வெப்பம், பூமியையும் அருகில் உள்ள கட்டடங்களையும் எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றிய ஆய்வுகளை நடத்துவதற்கான முயற்சிகளை இப்போதுதான் அறிஞர்கள் தொடங்கி இருக்கிறார்கள்.
ஏற்ற இறக்க வெப்பநிலை காரணமாக பூமி விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது. அதனால் கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளின் உறுதிப்பாட்டிற்கு மிரட்டல் ஏற்படும் வாய்ப்பு உருவாகலாம் என்று அமெரிக்காவின் சிகாகோ நகரின் வர்த்தக வட்டாரம் தொடர்பான ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த மிரட்டல் அதிகமானால் கட்டடங்களில் வெடிப்பு ஏற்படலாம் அல்லது தேவையற்ற பிரச்சினைகள் தோன்றலாம் என்று நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் குடிமை, சுற்றுப்புற பொறியியல் ஆய்வாளரான பேராசிரியர் அலெக்சாண்ட்ரோ ரோட்டா லோரியா தெரிவித்தார்.
அந்த ஆய்வின் முடிவுகள், ‘கம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங்’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
என்றாலும், பூமியின்கீழே வெப்பம் தேங்குவதால் கட்டடங்களின் பாதுகாப்பிற்கும் உறுதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் நகர்களும் நிறுவனங்களும் செயல்பாட்டு, பராமரிப்புப் பிரச்சினைகளை நீண்டகாலப்போக்கில் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறின.
பாதாள ரயில் பாதைகளின் வடிவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், சுவர்கள் வழியாக தண்ணீர் ஒழுகி உள்ளே வருவது போன்றவை ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் அடங்கும்.
பாதாள பருவநிலை மாற்றம் மௌனமான ஓர் ஆபத்து. அது நகர உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அந்த பாதிப்பை மொத்தமாக மதிப்பிட இயலாது. ஒவ்வொரு கட்டடத்தையும் மதிப்பிட்டு அதைத் தெரிந்துகொள்ளவேண்டிய நிலை இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறி உள்ளன.

