மான்ட்பீலியர் (அமெரிக்கா): அமெரிக்காவின் வெர்மான்ட் மாநிலத் தலைநகர் மான்ட்பீலியரில் உள்ள ‘ரைட்ஸ்வில்’ அணைக்கட்டின் நீர்மட்டம் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.
இதனையடுத்து, மான்ட்பீலியரிலிருந்து வெளியேறுவதற்கான சாலைவழிகள் மோசமான வெள்ளத்தால் மூடப்பட்டன. மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக்கொண்டனர்.
வெர்மான்ட் பகுதி நீரில் மூழ்கியிருக்கும் நிலையில், ஃபுளோரிடாவில் பெருங்கடல் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்வரை எட்டியுள்ளது. டெக்சஸ் மாநிலத்தில் கடும் வெப்பமான சூழல் நிலவுகிறது. கலிஃபோர்னியாவில் இந்த வார இறுதியில் சில பகுதிகளில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க், மேசசூசட், கனக்டிகட் உள்ளிட்ட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பெரும்பாலானவற்றில் கடந்த சில நாள்களாக 20 சென்டிமீட்டர்வரை மழை பெய்தது.
இந்நிலையில், மான்ட்பீலியர் நகரில் இருக்கும் 8,000 பேரும் தங்கள் வீடுகளில் உள்ள உயர்மாடிகளுக்கு இடம் மாறவேண்டும் என்று அந்நகர மேலாளர் வில்லியம் ஃபிரேசர், ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கேட்டுக்கொண்டார்.
அந்தப் பகுதியில் தேடி, மீட்கும் குழுக்கள் இதுவரை 117 பேரைத் தங்கள் வீடுகளிலிருந்தும் கார்களிலிருந்தும் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

