மணிலா: பிலிப்பீன்சின் ஆகப்பெரிய பேரங்காடியில் பணிபுரிந்துகொண்டிருந்த பாதுகாவலர் ஜொஜொ மெலேக்டெம் நடைபாதையிலிருந்து நாய்க்குட்டியைத் தூக்கி எறிந்ததற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி, இரண்டு சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியைத் திடீரென பிடித்து கிட்டத்தட்ட 5 மீட்டர் உயரமுள்ள நடைபாதையிலிருந்து தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறிய திருவாட்டி ஜேனின் சந்தோஸ் என்பவர், திரு மெலேக்டெமின் படத்தையும், தூக்கி எறியப்பட்ட நாய்க்குட்டியை பாதசாரி ஒருவர் தூக்கும் படத்தையும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
அந்த இரண்டு சிறுமிகளையும் திரு ஜொஜொ அவ்விடத்திலிருந்து வெளியேற்ற முயன்றதாகத் திருவாட்டி சந்தோஸ் கூறினார். அந்தச் சிறுமிகள் வெளியேற மறுத்ததால், பாதுகாவல் அதிகாரி அந்த நாய்க்குட்டியைத் தூக்கி நடைபாதையிலிருந்து கீழே எறிந்ததாக அவர் சொன்னார்.
மருந்தகத்தைச் சென்றடைந்தபோது நாய்க்குட்டி இன்னும் உயிருடன் இருந்ததாக அவர் கூறினார். இருப்பினும், அதற்கு ஏற்பட்ட காயங்களினால் அது உயிர் பிழைக்குமா என்பது தெரியவில்லை.

