தைவானுக்கு விரைவில் ஆயுதங்கள் வழங்க வலியுறுத்து

2 mins read
e5566528-fbaf-45f5-900a-b6651ebf00ff
தைவான் தனது தற்காப்பு வலிமையைப் பெருக்கிக்கொள்ள அதற்கு ஆயுதங்களை விரைந்து வழங்குவது முக்கியம் என்கிறார் அமெரிக்க ராணுவ ஜெனரல் மார்க் மிலி. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: தைவான் தீவு தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள ஏதுவாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தைவானுக்கு விரைவில் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவ ஜெனரல் மார்க் மிலி வலியுறுத்தி இருக்கிறார்.

தைவானுக்குப் படைக்கலன்களை வழங்கும் நாடுகளில் ஆக முக்கியமானதாக அமெரிக்கா திகழ்கிறது.

இதனிடையே, தைவானுக்கு ஆயுதம் விற்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறது.

தைவான் தனிநாடன்று எனக் கூறிவரும் சீனா, தேவைப்படின் ராணுவத்தின் துணையுடன் அதனைத் தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளவும் எண்ணம் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், “தைவான் தன்னுடைய தற்காப்பு வலிமையைப் பெருக்கிக்கொள்வதில் அமெரிக்கா, மற்ற நாடுகளின் உதவி வரும் ஆண்டுகளில் முடுக்கிவிடப்பட வேண்டும்,” என்று ஜெனரல் மிலி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.

வான்வெளியைத் தற்காக்கும், தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கும் திறன்கொண்ட ஆயுதங்கள் தைவானுக்குத் தேவை என்று ஜெனரல் மிலி குறிப்பிட்டார்.

அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் கிடைப்பது தாமதமாகி வருவதாகக் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே தைவான் கூறிவருகிறது.

ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அதனை எதிர்கொள்ள ஏதுவாக உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு ஆயுதத் தயாரிப்பாளர்கள் முன்னுரிமை வழங்குவது இதற்கொரு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒருவேளை சீனா முற்றுகையிட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் இவ்வாண்டில் தனது தற்காப்புச் செலவினங்களில் கவனம் செலுத்தப்போவதாகத் தைவான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, எஃப்-16 வகை போர்விமானங்களுக்கான பாகங்களுக்கும் படைக்கலக் கொட்டிலை நிரப்புவதிலும் கவனம் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்