பேங்காக்: தாய்லாந்தின் அடுத்த பிரதமராக ஆக பிட்டா லிம்ஜாரரோயின்ராட் முயன்று வருகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் அண்மையில் நடந்த வாக்கெடுப்பில் அவருக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தின் மேலவையில் தேவையான வாக்குகளைப் பெற திரு பிட்டா, 42, தவறிவிட்டார். இந்நிலையில், திரு பிட்டாவுக்கு வாக்களிக்காத மேலவை உறுப்பினர்களைக் கண்டித்து பேங்காக்கில் சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு புதன்கிழமை நடக்க இருக்கிறது. அப்போது திரு பிட்டாவை ஆதரிக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் விரிவடையும்,” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
நடந்து முடிந்த தேர்தலில் திரு பிட்டாவின் எட்டுக் கட்சிக் கூட்டணிதான் அதிக இடங்களைப் பிடித்தது. அந்தக் கூட்டணிக்கு மொத்தம் 26 மில்லியன் வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.
“மேலவை உறுப்பினர்கள் வாக்காளர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும், மீண்டும் வாக்கெடுப்பு நடக்கும்போது அவர்கள் திரு பிட்டாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
“இல்லை எனில் தேர்தலில் திரு பிட்டாவுக்குக் கிடைத்த வாக்காளர்களின் சக்தியை அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும்,” என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் முழங்கினார்.
‘முன்னேற்றக் கட்சி’ என்ற கட்சியின் தலைவரான திரு பிட்டாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளியல் நாடான தாய்லாந்தின் நிலை சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அந்த நாட்டில் கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அதில் திரு பிட்டாவின் கூட்டணிக்குத்தான் அதிக வெற்றி கிடைத்தது. 500 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில் 312 இடங்களைத் திரு பிட்டாவின் கூட்டணி கைப்பற்றியது. பிரதமராக வேண்டுமானால் திரு பிட்டாவுக்குக் குறைந்தபட்சம் 375 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
தொடர்புடைய செய்திகள்
மேலவை உறுப்பினர்கள் ராணுவ ஆட்சியினரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் திரு பிட்டாவுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. திரு பிட்டா அதில் மீண்டும் போட்டி யிடுவரா என்பது தெரியவில்லை. அவர் மீண்டும் போட்டியிட்டாலும் அவருக்குப் போதிய ஆதரவு கிடைப்பது சந்தேகமே என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.