பேங்காக்: தாய்லாந்தின் அடுத்த பிரதமராவதில் முன்னிலை வகித்து வந்த திரு பிட்டா லிம்ஜரோயின்ராட், அடுத்த வாரம் நடத்தப்படும் மற்றொரு வாக்கெடுப்பில் நாடாளுமன்றம் தமக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் பிரதமர் போட்டியிலிருந்து தாம் விலகிக்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட முதல் வாக்கெடுப்பில் பிரதமர் பதவிக்கு திரு பிட்டா முன்னெடுத்த முயற்சியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறியடித்தனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் திரு பிட்டாவின் முன்னேற்றக் கட்சியே ஆக அதிகமான இடங்களில் வென்றது. ஒன்பது ஆண்டுகளாக ராணுவ ஆட்சியில் இருந்து வந்துள்ள தாய்லாந்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய இளம் வாக்காளர்கள் பலரும் திரு பிட்டாவின் கட்சிக்கு வாக்களித்து இருந்தனர்.
புதிய பிரதமரைத் தேர்வுசெய்ய நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை இரண்டாவது வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. தேவையான வாக்குகளைப் பெறுவதில் அம்முறையும் தாம் தோல்வி கண்டால், கூட்டணிப் பங்காளியான புவே தாயை வேட்பாளராக தாம் ஆதரிப்பதாக திரு பிட்டா சொன்னார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி உரையில், “நாங்கள் வெற்றி பெறாததற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என திரு பிட்டா குறிப்பிட்டார்.
முதல் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 375 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் பட்சத்தில், 51 வாக்குகள் குறைவாக அவர் பெற்றார்.
அடுத்த சுற்று வாக்கெடுப்பில் தமக்கு ஆதரவு கிடைக்க செனட்டர்களிடம் வலியுறுத்துமாறு தம் ஆதரவாளர்களுக்கு திரு பிட்டா சனிக்கிழமை அறைகூவல் விடுத்தார்.