தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை மாற்றம் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கத்துடன் சீனாவில் அமெரிக்கப் பிரமுகர்

2 mins read
90e969be-9824-4e3e-ab38-b8acfe7c4fae
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தகவல் தொடர்புகளை மீண்டும் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் அரசதந்திர முயற்சிகளில் மேலும் ஒன்றாக திரு ஜான் கெர்ரியின் வருகை இடம்பெறுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ் 

நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு வருகை அளித்தார்.

அவர் சீனத் தலைவர்களுடன் மூன்று நாள் பேச்சு நடத்துகிறார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பல பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இந்நிலையில், பருவநிலை மாற்றங்களால் உலகளாவிய அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்த்து போராடுவதில் அந்த இரு நாடுகளுக்கும் எந்த அளவுக்கு ஆற்றல் இருக்கிறது என்பதைப் பரிசோதிக்கும் அளவிற்கு அந்தப் பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்றுமதி கட்டுப்பாடுகள், மனித உரிமைகள், அமெரிக்காவின் நாடாளுமன்ற நாயகர் நான்சி பெலோசி சென்ற ஆகஸ்ட்டில் தைவானுக்கு மேற்கொண்ட பயணம் ஆகியவை தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றங்கள் கூடி இருக்கின்றன.

அந்தப் பதற்றங்களைக் குறைத்து இரு நாடுகளுக்கும் இடையில் மறுபடியும் தொடர்புகளைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் இப்போது அரசதந்திர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த முயற்சிகளில் மேலும் ஒன்றாக திரு கெர்ரியின் சீன வருகை இடம்பெறுகிறது.

ஓராண்டுக்குப் பிறகு இப்போதுதான் இந்த இரண்டு நாடுகளும் பருவநிலை பாதிப்புகள் பற்றிய பேச்சுகளைப் பரபரப்பாகத் தொடங்குகின்றன.

திரு கெர்ரி இரண்டாண்டுகளுக்கு முன் பருவநிலை தொடர்பான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதராக பெயர் குறிப்பிடப்பட்டார்.

சீன அதிகாரிகளுடன் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்த தான் விரும்புவதாக திரு கெர்ரி தெரிவித்தார்.

மீத்தேன் வாயு வெளியேற்றம் தொடர்பில் முன்னேற்றத்தைச் சாதிக்கலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

மாற்று எரிசக்திகள் உருவாக்கத்தை வேகப்படுத்தி, அதன்மூலம் அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்து செயல்பட்டு, எஞ்சிய உலகத்துக்கு உதவ முடியுமா என்பதைக் காணும் வழிகளை ஆராய்ந்து அறிய தாங்கள் விரும்புவதாகவும் திரு கெர்ரி வியாழக்கிழமை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே குறிப்பிட்டார்.

திரு கெர்ரியும் அவருடைய சீன சகாவான ஸி ஸென்ஹுவாவும் இந்த வாரம் நடத்தும் பேச்சுகள், வரும் செப்டம்பரில் ஐநா பொதுப் பேரவையிலும் கலிஃபோர்னியாவில் நடக்கும் ஆசியப் பசுபிக் பொருளியல் ஒத்துழைப்பு தலைவர்கள் உச்சநிலை மாநாட்டிலும் துபாயில் நடக்கவிருக்கும் ஐநா பருவநிலை உச்சநிலை மாநாட்டிலும் பல அறிவிப்புகள் இடம்பெற உதவியாக இருக்கும் என்று அமெரிக்காவின் தேசிய வளங்கள் தற்காப்பு மன்றத்தின் உத்திபூர்வ இயக்குநரான திரு ஜேக் ஸ்மிச் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்