தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிட்டாவை நாடாளுமன்றத்திலிருந்து தற்காலிகமாக நீக்க தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவு

2 mins read
92cdf4eb-d59b-4c02-8634-99a4625c8b0e
திரு பிட்டாவை நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்தது. - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்தில் பிரதமர் ஆவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூவ் ஃபார்வர்ட் கட்சியின் தலைவரான பிட்டாவின் கனவு கலைந்துள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாலும் அவரது பிரதமர் கனவை அவருக்கு எதிராக வாக்களித்து ராணுவ, மன்னர் ஆதரவு உறுப்பினர்கள் கலைத்துவிட்டனர்.

திரு பிட்டாவின் மூவ் ஃபார்வர்ட் கட்சி, ஏறக்குறைய பத்து ஆண்டுகால ராணுவ ஆதரவு ஆட்சியால் விரக்தியடைந்த இளம், நகர்ப்புற மக்களின் ஆதரவைப் பெற்று இருந்தது. ஆனால் அரசாங்கத்தை அமைப்பதற்கான அதன் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளன. திரு பிட்டா தனது பிரதமர் வேட்புமனு மீதான விவாதத்திற்காக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் 2வது சுற்று வாக்கெடுப்புக்கு அவரை பரிசீலிக்க உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.

“நாம் மீண்டும் சந்திக்கும் வரை விடைபெற விரும்புகிறேன்,” என்று பிட்டா நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு தெரிவித்தார்.

முன்னதாக ஊடக நிறுவனம் ஒன்றில் திரு பிட்டா பங்குகள் வைத்திருந்ததால், மே 14ஆம் தேதி நடந்த தேர்தலில் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் பிட்டா தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

ஊடக நிறுவனமான ‘ஐடிவி’யில் பங்குகளை வைத்திருப்பதால் தேர்தல் விதிகளை தாம் மீறவில்லை என திரு பிட்டா வாதிட்டு வந்துள்ளார். பல ஆண்டு காலமாக அது மக்கள் தொடர்பு செயல்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதோடு தந்தைவழியில் தனக்கு பங்குகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்திலிருந்து தம்மை நீக்க உத்தரவிட்டதற்கு எதிராக திரு பிட்டா பதிலளிக்க நீதிமன்றம் 15 நாள் அவகாசம் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றமும் அவரை இடைநீக்கம் செய்து அவருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

திரு பிட்டா, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். வேளாண் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.

குறிப்புச் சொற்கள்