அமிலம் வீசியதாக 12 வயதுச் சிறுமி மீது குற்றச்சாட்டு

அமிலம் வீசியதாக 12 வயதுச் சிறுமி மீது குற்றச்சாட்டு

1 mins read
b8bf1cf8-1cce-4719-844a-000aa09eb471
டியேரா சமர்ஸ் (படத்தில்)மீதும் அவரது சகோதரிகள், உறவினர்கள்மீதும் 12 வயதுச் சிறுமி அமிலத்தை ஊற்றியதாகக் கூறப்பட்டது. - படம்: கோஃபண்ட்மீ.காம்

டெட்ராய்ட்: அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரப் பூங்காவில் சிறுமிகளுக்குள் மூண்ட சண்டை விபரீதமாய் முடிந்துள்ளது.

சண்டையில் ஈடுபட்ட 12 வயதுச் சிறுமி ஒருவர், டியேரா சமர்ஸ் எனும் 11 வயதுச் சிறுமி, அவரது சகோதரிகள், உறவினர்கள் ஆகியோர் மீது அமிலத்தை ஊற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தில் டியேரா சமர்ஸ் கடுமையாகக் காயமடைந்தார். அவரது முதுகு, கால்கள், கைகள், தோள் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மற்ற சிறுமிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லை.

ஜூலை 9ஆம் தேதி உள்ளூர் தொடக்கப்பள்ளி ஒன்றின் விளையாட்டுத் திடலில் சண்டை மூண்டது.

அமிலம் வீசப்பட்டதும் சிறுமி டியேரா அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடினார். தீக்காயத்துக்கான சிகிச்சைப் பிரிவில் அவர் நான்கு நாள் சிகிச்சை பெற நேரிட்டது.

“தன் மகளுக்கு அமிலத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும்படி ஒரு தாய் தந்திருக்கிறார் என்றால் அந்தத் தாயும் கைது செய்யப்படவேண்டும்,” என்று டியேராவின் தாயார் கூறினார்.

“என் மகளுக்கு இந்த அச்சமூட்டும் சம்பவம் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்