பிரிட்டிஷ் இடைத் தேர்தல்: ஆளும்கட்சிக்கு மூன்றில் ஒன்றுதான்

பிரிட்டிஷ் இடைத் தேர்தல்: ஆளும்கட்சிக்கு மூன்றில் ஒன்றுதான்

2 mins read
f8925111-e56e-4e2c-8dd9-083156d81b2b
இடைத்தேர்தல் முடிவுகள் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. - படம்: இபிஏ

லண்டன்: பிரிட்டனில் மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி முக்கியமான இரண்டு தொகுதிகளை இழந்துவிட்டது.

என்றாலும் எதிர்பாராதவிதமாக அந்தக் கட்சி ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. கன்சர்வேடிவ் கட்சி தக்கவைத்துக்கொண்ட தொகுதி, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பழைய தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இது முக்கிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு ஒரு பின்னடைவு என்று கூறப்படுகிறது.

பிரிட்டனில் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதைக் கணிப்பதற்கான தேர்தல் என்று இந்த இடைத்தேர்தல் கருதப்படுகிறது.

கன்சர்வேடிவ் கட்சி 500க்கும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் திரு ஜான்சனின் முன்னாள் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுவும் கைவிட்டுப்போயிருந்தால், கடந்த 50 ஆண்டு காலத்தில் ஒரேநேரத்தில் நடந்த இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் தோற்றுப்போன முதல் பிரதமர் என்ற பெயர் திரு சுனக்கிற்கு ஏற்பட்டு இருக்கும்.

நல்லவேளையாக அது தவிர்க்கப்பட்டு விட்டது. திரு ஜான்சன் பிரதமராக இருந்தபோது பல தில்லுமுல்லு விவகாரங்கள் தலைதூக்கின. அதையடுத்து அவர் சென்ற ஆண்டில் பதவி விலகவேண்டிய நிலை ஏற்பட்டது.

அவருக்குப் பிறகு பிரதமரான திருவாட்டி லிஸ் டிரஸ், பொருளியல் பிரச்சினைகள் காரணமாக கொஞ்ச நாட்களிலேயே பதவியைத் துறந்தார்.

அதையடுத்து முன்னாள் நிதி அமைச்சரும் முதலீட்டு வங்கியாளருமான திரு சுனக் பிரதமர் பதவியை ஏற்றார். பழமைவாத கட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க திரு சுனக் தனது நிபுணத்துவ விவேகங்களைப் பயன்படுத்தி போராடி வருகிறார்.

இந்த நிலையில் அவர் இடைத்தேர்தலில் ஒரே ஒரு வெற்றி மூலம் ஓரளவுக்குத் தப்பி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்