பேங்காக்: தாய்லாந்தில் மூவ் ஃபார்வர்ட் கட்சியின் தலைவரான பிட்டா, பிரதமர் பதவிக்கு பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வி அடைந்துள்ளார். அவரை நீதிமன்றம் தகுதிநீக்கம் செய்தது. அது மட்டுமல்லாமல் நாடாளுமன்றமும் அவரை இடைநீக்கம் செய்தது.
இதனால் பிரதமராகும் பிட்டாவின் கனவு கலைந்துவிட்டது.
இந்த நிலையில் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிப்பதற்காக மூவ் ஃபார்வர்ட் கட்சி தற்போது ஒதுங்கியிருக்கிறது.
“பிரதமர் பதவிக்கு பிட்டா போட்டியிட முடியாது. ஆனால் புதிய அரசாங்கத்தை அமைக்கும் எங்களுடைய கொள்கையில் மாற்றமில்லை. பழைய அரசாங்கத்தின் அதிகாரத்தைத் தடுத்து நிறுத்தும் எங்களுடைய கடமையும் தொடரும்,” என்று மூவ் ஃபார்வர்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சாய்டாவட் துலாதோன் வெள்ளிக் கிழமை தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பிட்டா இடைநீக்கம் செய்யப்பட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர் பிரதமராவதற்கான இரண்டாவது சுற்று வாக்கெடுப்பை தடுத்துவிட்டதால் மூவ் ஃபார்வர்ட் கட்சி அடி மேல் அடி வாங்கியது.
இதையடுத்து முதல் முறையாக வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தை அக்கட்சி நடத்தியது.
“மூவ் ஃபார்வர்ட் கட்சி அரசாங்கம் அமைக்கும் பாதையை எதிர்த்தரப்பு சக்திகள் தடுத்து நிறுத்தியது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எட்டு கட்சி கூட்டணிக்கு எங்களுடைய உறுதியான ஆதரவு தொடரும். அடுத்த சுற்று வாக்கெடுப்பில் பிரதமர் பதவிக்கு பியூ தாய் கட்சியின் வேட்பாளரை நிறுத்துவோம்,” என்றார் சாய்டாவட்.
8 கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பியூ தாய் கட்சி இரண்டாவது பெரிய கட்சியாகும். அக்கட்சியைச் சேர்ந்த மூவரில் ஒருவர் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. ஜூலை 27ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
பியூ தாய் கட்சி, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுடன் தொடர்புள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சொத்து முதலீட்டாளரான ஸ்ரேத்தா தவிசின்னை அக்கட்சி பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

