மலேசியத் தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு இடையேயான அரசியல் வேறுபாடுகளை ஒருபுறம் தள்ளி 11ஆவது உலகத் தலைவர் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த இணைந்தது, மலேசிய சமூகத்தின் முதிர்ச்சியைக் காட்டுவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டிக் கூறியுள்ளார்.
“நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியை இந்தியச் சமூகம் வழிநடத்துகிறது. இப்படித்தான் நாம் ஒன்றிணைந்து புதிய மலேசியாவை உருவாக்க வேண்டும். இதற்காக நான் இந்தியச் சமூகத்தை வணங்குகிறேன்,” என்ற திரு அன்வாரின் குரல், பலத்த கைத்தட்டலுக்கிடையே ஓங்கி ஒலித்தது.
கோலாலம்பூரிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் ‘திவான் துங்கு சான்செலர்’ அரங்கில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெற்று வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நேற்று, “சகோதர சகோதரிகளே, வணக்கம்” என்று தமிழில் கூறி, திரு அன்வார் மலாயிலும் ஆங்கிலத்திலும் சிறப்புரை ஆற்றினார்.
இம்மாநாட்டுக்காக ஒரு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறிய திரு அன்வார், அந்தப் பல்கலைக்கழகத்தின் இந்தியக் கல்விப் பிரிவு மேலும் 2 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் என்றார். இந்தியக் கல்விப் பிரிவு நடத்தும் பணித்திட்டங்களை ஆதரிப்பதுடன் இந்த நிதி, தமிழின் அரும் நூல்கள் சிலவற்றை மொழிபெயர்க்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் திரு அன்வார், அரங்கத்தில் இருந்த 1,000 மாநாட்டுப் பேராளர்களுக்கும் மற்றும் பல பொதுமக்களுக்கும் முன் கூறினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு முன் மலேசியாவில் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரசின் காலஞ்சென்ற தலைவர் எஸ். சாமிவேலுவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மாநாடுகளில் இரண்டு மலேசியாவில் நடந்தபோது திரு சாமிவேலு ஆற்றிய பங்கு இந்நிகழ்சிசயில் நினைவில் கொள்ளப்பட்டது.
திரு அன்வாருடன் மலேசிய மனிதவள அமைச்சர் வ. சிவகுமார், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.சரவணன், மாநாட்டுத் தலைவர் த. மாரிமுத்துத் தங்கவேலு உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
சில நாட்களுக்கு முன்னர், திரு சரவணன் வாழ்த்துரை ஆற்ற வேண்டும் என்று பிரதிநிதிகள் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினரிடம் வலுவாக கோரிக்கை விடுத்த சம்பவம், கைகலப்பின் விளும்பை நெருங்கியதாக மலேசிய ஊடகங்கள் தளங்கள் குறிப்பிட்டன. இருந்தபோதும் இரண்டாம் நிகழ்ச்சியன்போது மோதல் ஏதுமின்றி இருவருமே மேடையில் உரையாற்றினர்.
‘இணையக் காலகட்டத்தில் தமிழ்மொழி’ என்ற கருப்பொருளை ஒட்டிய இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமர்வுகளில் ஏறத்தாழ 501 கட்டுரைகள் வாசிக்கப்படும் என்று மலாயா பல்கலைக்கழகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரிலிருந்து மொத்தம் நான்கு கட்டுரைகள் மாநாட்டில் வாசிக்கப்பட்டன. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், கவிமாலை காப்பாளர் மா. அன்பழகன், ‘செம்மொழி’ இதழ் ஆசிரியர் எம் இலியாஸ், முனைவர் இரத்தின வேங்கடேசன் ஆகியோர் தத்தம் கட்டுரைகளைப் பற்றிய படைப்புகளை நடத்தி அவற்றையொட்டிய கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அத்துடன், சிங்கப்பூரின் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் ‘சிங்கப்பூர் அரசில் தமிழ்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். படைப்பாளர்களுடன் பேராளர்கள் என மொத்தம் 75 பேர் சிங்கப்பூரிலிருந்து இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966ஆம் ஆண்டு முதல் மலேசியா, சென்னை, பிரான்ஸ், இலங்கை, மதுரை, மொரிசியஷ், தஞ்சாவூர், அமெரிக்காவின் சிக்காகோ நகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. மலேசியாவில் இப்போது நான்காவது முறையாக நடைபெறுகிறது. உலகின் பல பகுதிகளில் இருந்து ஏறக்குறைய 1,000 பேர் இதில் கலந்துகொண்டனர்.

