ஃபீனிக்ஸ், அரிசோனா: ஒரு மனிதனை உயர்வெப்பம் தாக்கும்போது என்ன நடக்கும்? சூடேறிவரும் உலகில் நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள முடியும்?
இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, அரிசோனா ஆய்வாளர்கள் புதுவிதமான இயந்திர மனிதனை உருவாக்கியுள்ளனர். அந்த இயந்திர மனிதனால் சுவாசிக்கவும், நடுங்கவும், வியர்க்கவும் முடியும்.
அரிசோனா தலைநகர் ஃபீனிக்ஸ் தற்போது கடுமையான வெப்பத்தைத் தாக்குப்பிடித்து வருகிறது. சென்ற வெள்ளிக்கிழமை, தொடர்ந்து 22வது நாளாக வெப்பநிலை 43 டிகிரி செல்சியசுக்குமேல் இருந்தது.
இத்தகைய உயர்வெப்பம் மனிதர்களை எவ்வாறு பாதிக்கும் என்பது இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. அதற்குக் கைகொடுக்கிறது அரிசோனா பல்கலைக்கழகத்தின் ‘எண்டி’.
“இவர்தான் உலகின் முதல் வெளிப்புற வெப்ப உருவப் பொம்மை. இவரை நாங்கள் வெளியில் எடுத்துச்சென்று, சுற்றுப்புறத்திலிருந்து உடலில் ஏறும் வெப்பத்தை அளவிடமுடியும்,” என்று இயந்திரப் பொறியியல் பேராசிரியர் கொன்ரட் ரிகஸ்சியூஸ்கி ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
எண்டி பார்ப்பதற்கு சாதாரண உருவ பொம்மை போலிருக்கலாம். ஆனால், அதன் எபாக்சி/கரிம நார் சருமத்தில் ஏகப்பட்ட தொழில்நுட்பம் புதைந்துள்ளது.
எண்டியின் உட்புற குளுமை இயக்கமும் சருமத் துளைகளும் சுவாசிக்கவும் வியர்க்கவும் துணை புரிகின்றன. இதன் உடலில் 35 தனித்தனி வெப்பப் பகுதிகள் உள்ளன. மனிதனைப் போலவே, இதற்கும் முதுகில்தான் அதிகமாக வியர்க்கும்.
எண்டியை உருவாக்க அரை மில்லியன் டாலருக்குமேல் செலவானது.
உடல் அதிகமாகச் சூடேறும்போது என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த இயந்திர மனிதன் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
வெவ்வேறு வயதினர், வெவ்வேறு இடங்களில் எந்த வகையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதைச் சோதிப்பதற்கு எண்டி உதவியாக இருக்கும்.
வெப்பத்திற்கு உகந்த ஆடைகளை வடிவமைப்பதற்கும், குளுமை மையங்கள் எந்த அளவுக்கு குளுமையாக இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கும் கூட எண்டி துணைபுரியக்கூடும்.


