ஃபுஜியான்: சீனாவின் தென்கிழக்கு மாநிலமான ஃபூஜியானில் வெள்ளிக்கிழமை டோக்சுரி சூறாவளியால் கனமழை பெய்தது.
பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு பலத்த சேதத்தை விளைவித்த மெரான்டி சூறாவளியை அடுத்த ஃபூஜியான் வட்டாரத்தில் வீசும் இரண்டாவது ஆக வலுவான சூறாவளியாக டோக்சுரி கருதப்படுகிறது.
இதனால் பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டதாகவும் கடலோர எண்ணெய், எரிவாயு உற்பத்தித் தளங்களில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில், டோக்சுரி சூறாவளியால் மணிக்கு 137 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக வானிலை ஆய்வகம் கூறியது. உயிருடற்சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் இல்லை.
பள்ளிகள், தொழிற்சாலைகள், கடைத்தொகுதிகள் ஆகியவை மூடப்பட்டதால் சாலைகளும் வெறிச்சோடியிருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.
காற்று பலமாக வீசுவதால் மின்இணைப்புகளில் தீப்பொறி ஏற்படுவதையும் தீ மூண்டதையும் சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகள் காட்டுகின்றன.
ஏற்கெனவே பிலிப்பீன்சிலும் தைவானிலும் டோக்சுரி சூறாவளியால் பலத்த சேதம் ஏற்பட்டதுடன் 10க்கு மேற்பட்டோர் மாண்டனர்.