சோல்: தென்கொரியாவில் இந்த மாதத் தொடக்கத்தில் சுரங்கப்பாதை ஒன்றில் வெள்ளம் புகுந்து 14 பேர் மாண்டனர்.
அந்தச் சம்பவம் தொடர்பில் நடந்த அதிகாரபூர்வ விசாரணை முடிந்து இருக்கிறது.
அந்தத் துயரச் சம்பவத்தைத் தவிர்த்து இருக்க முடியும் என்று அதிகாரபூர்வ விசாரணையின் மூலம் தெரியவந்து இருக்கிறது.
சுரங்கப்பாதை வெள்ளம், மரணம் தொடர்பில் அரசாங்க கொள்கை ஒருமுகப்பாட்டு அலுவலகம் என்ற அமைப்பு 10 நாள் விசாரணை நடத்தியது.
காவல்துறையும் தீயணைப்புத் துறையும் மாநகர அதிகாரிகளும் வெள்ளத்தைத் தடுக்க தவறிவிட்டார்கள் என்பது அந்த விசாரணையின் மூலம் தெரியவந்து இருக்கிறது.
தென் கொரியாவில் வடபுறம் உள்ள சுங்சியோங் என்ற மாகாணத்தில் அமைந்து இருக்கும் அரசாங்கக் கட்டட வளாகத்திற்கு அருகே உள்ள ஓசோங் என்ற நகரில் அந்தச் சுரங்கப்பாதை இருக்கிறது.
அந்தப் பகுதியில் ஜூலை 15ஆம் தேதி வரலாறு காணா அளவுக்கு ஐந்து நிமிடம் மழை கொட்டித் தீர்த்தது. பக்கத்தில் ஓடும் ஆற்றின் கரை உடைந்து தண்ணீர் சுரங்கப்பாதைக்குள் புகுந்துவிட்டது.
அதனால் சுரங்கப்பாதை முற்றிலும் மூழ்கிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆற்றின் கரைகள் வலுவாக இல்லை. பருவநிலை அலுவலக அதிகாரிகள் முன்னதாகவே மழை குறித்து எச்சரித்து இருந்தார்கள்.
ஆனால், மாநகர நிர்வாகிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. பல அழைப்புகள் வந்தபோதிலும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் யாரும் உரிய நேரத்திற்கு அனுப்பப்படவில்லை என்று விசாரணை அறிக்கை தெரிவித்தது.
மாநகர நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேரிடர் ஆயத்தநிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக காவல்துறை ஒருமுகப்பாட்டு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

