பேங்காக்: தாய்லாந்தில் சனிக்கிழமை பட்டாசுக் கிடங்கு ஒன்றில் தீ மூண்டு வெடித்துச் சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் பற்றி அதிகாரிகள் முழு விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
தாய்லாந்தின் தென் பகுதியில் உள்ள நரத்திவாட் என்ற மாநிலத்தில் இருக்கும் சுங்கை கூலோக் என்ற மாவட்டத்தில் இருந்த பட்டாசுக் கிடங்கு வெடித்துச் சிதறியது.
அந்தக் கட்டடத்தில் பத்திரிவைப்பு வேலை நடந்துகொண்டு இருந்ததாகவும் திடீரென்று நெருப்பு கிளம்பி தீ பரவியதாக நம்பப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
“சுங்கை கூலோக் பட்டாசுக் கிடங்கு வெடித்துச் சிதறியது. அதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 115 பேர் காயம் அடைந்தனர்,” என்று நரத்திவாட் ஆளுநர் சானான் பொங்காசோர்ன் தெரிவித்தார்.
பட்டாசுக்கிடங்கு வெடித்துச் சிதறியதைக் காட்டும் காணொளிகளை உள்ளூர் ஊடகங்கள் பதிவேற்றின. அந்த விபத்து காரணமாக பல கடைகளும் வீடுகளும் வாகனங்களும் படுமோசமாக பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
மலேசியாவுடன் கூடிய எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் அந்தக் கிடங்கு வெடித்ததால் 500 வீடுகள் பாதிக்கப்பட்டாக தாய் பிபிஎஸ் என்ற தொலைக்காட்சி கூறியது.