வாஷிங்டன்: நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது. அந்தத் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி செய்ததன் தொடர்பில் அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திரு டிரம்ப் பிரசாரம் செய்துகொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் அவர்மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சென்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் அப்பொறுப்பை ஏற்றார். அமெரிக்க நாடாளுமன்றம் அவரை அதிபராக அங்கீகரிப்பதைத் தடுத்ததுடன் திரு டிரம்ப் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவிடாமல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் அவர்மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், இந்த விவகாரத்தின் தொடர்பில் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியில் திரு டிரம்ப், அறுவருடன் இணைந்து செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
அதிபர் தேர்தலில் ஏமாற்று வேலை இடம்பெற்றதாக திரு டிரம்ப் சொன்னார். அது பொய்யான தகவல் என்பதைத் தெரிந்தே அவர் அவ்வாறு சொன்னார் என்பது அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம்.
தேர்தல் நிர்வாகத்தின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கவும் தேசிய அளவில் அவநம்பிக்கையையும் கோபத்தையும் எழ வைப்பதாக அவர் இவ்வாறு செய்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். திரு டிரம்ப்பின் நீதிமன்ற விசாரணையை விரைவில் முடிக்க அமெரிக்காவின் நீதித்துறை முயற்சி செய்யும் என்று திரு ஸ்மித் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திரு டிரம்ப் என்றுமே சட்டத்தை மீறாமல் நடந்துகொண்டதாக அவரின் தரப்பு, அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. அவர்மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவது, அந்த காலத்தில் ஜெர்மனியில் நாட்ஸி கட்சி அரசியல் எதிரிகளை அழிப்பது போன்ற செயலாகும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.

