பேங்காக்: புதிய அரசாங்கம் அமைப்பதில் நிச்சயமற்ற நிலை நீடிப்பதால் சொந்த நாட்டுக்குத் திரும்புவதை தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ர தள்ளிப்போட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 10ஆம் தேதி பேங்காக்கின் டோன் முயெங் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கப் போவதாக அவர் சொல்லி இருந்தார்.
தக்சின் நாடு திரும்பும் அறிவிப்பை அவரது மகளான பேயெடோங்டான் ஜூலை இறுதிவாக்கில் வெளியிட்டு இருந்தார்.
பியூ தாய் கட்சியின் பிரதமர் பதவிக்கான மூன்று வேட்பாளர்களில் தக்சினின் மகளும் ஒருவர்.
தாய்லாந்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, அரசியல் நிலவரம் ‘அதிக நிலைத்தன்மை’க்குத் திரும்பும்போது தக்சின் நாடு திரும்பத் திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரம் கூறுகிறது.
கடந்த 2008 ஆகஸ்ட் முதல் தாய்லாந்துக்கு வெளியே வசித்து வருகிறார் தக்சின்.
அவர் நாட்டில் இல்லாதபோது அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றுக்கு பத்தாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நாடு திரும்பியதும் தக்சின் தமக்கான சிறைத் தண்டனையைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தண்டனையை ரத்து செய்யும் நோக்கில் அரச மன்னிப்புக்கு அவர் தகுதிபெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறாது என்று வெளியான தகவலுக்கு இடையே தக்சின் நாடு திரும்புவது தள்ளிப்போய் இருக்கிறது.
வெளியேற இருக்கும் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்று உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவை பியூ தாய் கட்சி திரட்டி வருகிறது.
மே 14ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரண்டாவது பெரிய வெற்றியை அக்கட்சி பெற்றது.
தக்சினோடு தொடர்புடைய கட்சியாக பியூ தாய் கட்சி பார்க்கப்படுகிறது. புதிய அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் பெரும்பான்மை அக்கட்சிக்குத் தேவைப்படும்.
ஆனால், அந்த இரு அவைகளிலும் உள்ள 250 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், பதவி விலக இருக்கும் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவுக்கும் துணைப் பிரதமர் பிரவிட் வோங்சுவானுக்கும் விசுவாசமாக இருப்பவர்கள் என்று நம்பப்படுகிறது.
ராணுவ ஆட்சிக் காலத்தில் இந்த இரு தலைவர்களால் பெரும்பாலான உறுப்பினர்கள் இரு அவைகளிலும் நியமிக்கப்பட்டார்கள்.
விலக இருக்கும் பிரதமர் மற்றும் துணைப் பிரதமரோடு தொடர்புடைய அரசியல் கட்சிகளான யுனைடெட் தாய் நேஷன், பாலாங் பிரசாரத் ஆகியவற்றுடன் கூட்டணி அமைப்பதை பியூ தாய் கட்சி தவிர்த்து வருகிறது.